தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு!

தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு!

எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டம், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக தொற்று நீக்கல் சட்டவிதிகளுக்கு அமைய கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அவர் சார்பில் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியாது எனவும் வேட்பாளரின் உறவினர்கள் அல்லாத ஏனையவர்கள் இவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வேட்புமனுத் தக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரான ஒருவாரம் காலம் வரையில் எவ்வித விழாக்களிலும் வேட்பாளர்கள் கலந்துக் கொள்ளக்கூடாது என்றதுடன் சமய நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று பேர் மாத்திரமே வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியும் என்பதுடன் வேட்பாளர்களின் கட்சியின் கொள்கைத் திட்டம், சின்னம், அவர்களது போட்டி இலக்கம், புகைப்படம், துண்டுப்பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று கையளிக்க முடியும் என்றாலும் வாகனங்களில் அதனை காட்சிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளுக்குச் சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும்போது, குறித்த வீட்டு உறுப்பினர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாத வகையில் பிரசாரங்களை மேற்கொள்வதுடன் ஒலிபெருக்கிகளை உபயோகிக்கக் கூடாது எனவும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கம், புகைப்படம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்று நீக்க சட்டவிதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகளுக்கமைய காலை 7 மணி தொடக்கம் இரவு எட்டு மணிவரையிலேயே பிரசாரங்களில் ஈடுப்பட முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைவிட, வேட்பாளர்களின் கட்சி, கொடி மற்றும் பதாதைகளை பிரசாரக் கூட்டம் இடம்பெறும் தினத்திலும் கூட்டம் நடைபெறும் இடத்திலும் மாத்திரமே காட்சிப்படுத்த முடியும் என்பதுடன் வேட்பாளர், அவரின் சொந்த வாகனத்தில் அவரது கட்சியின் சின்னம், இலக்கம் மற்றும் கட்சியின் கொடியை காட்சிப்படுத்தலாம். ஆனால் வாகனத்தின் பொதுவான நிறத்தை மாற்றும் வகையிலோ பின்பகுதி கண்ணாடியை மூடும் வகையிலோ காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பிரசாரக் கூட்டகளை நடத்துவதற்காக பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் சிறியளவிலான கூட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் கடக்கும் வரையில் எந்தவித கூட்டங்களையும் நடத்தக் கூடாது என்ற அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஓகஸ்ற் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடைபெறும்போது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் பொது இடங்களில் அவரது புகைப்படம், சின்னம், இலக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதோ துண்டுப் பிரசுரம் வழங்குவதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வேட்பாளர்களுக்கு ஆதவளிக்கும் வகையில் அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சு நிலையத்தினதும், அவற்றில் கருத்து தெரிவிப்பவர்களினதும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறு பதிவுச் செய்யப்படாத துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை வேட்பாளர் இன்றி வேறொருவர் வழங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

இதனைவிட, LED திரை பொருத்தப்பட்ட வாகனங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் மாத்திரமே நடத்த முடியும் எனவும் வீதிகளில் பயணிக்கும் போது பிரசாரம் செய்யமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேரணிகளை நடத்தவோ அதனை ஒழுங்கு செய்வதையோ தவிர்த்துக் கொள்ளவதுடன் மத வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குறித்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.