6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்!

6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்!

இலங்கைக்கு தேவையாகவுள்ள 600, 000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.
இதனால், இலங்கையில் தற்போது, இரண்டாவது மாத்திரை செலுத்துவதற்கு 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பானிய பிரதமர் யொஷிஹிதே சுகாவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியமா அகிரா இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.