மன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் சிக்கினார் மன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் சிக்கினார்

மன்னாரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழில் சிக்கினார்

மன்னார் - பேசாலையில் உள்ள தேவாலயமொன்றுக்கு அடையாளம் தெரியாத நபரொருவர் வந்து சென்றதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியகோவில் பகுதியில் வைத்து இன்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலையை சொந்த இடமாக கொண்ட அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் (40 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் நண்டு கொடுப்பதற்காகவே பேசாலைக்கு சென்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

 

இது தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில்,

சந்தேகநபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு தேடியுள்ளார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்கு இன்று நண்பகல் வந்துள்ளார். சந்தேகநபர் இந்தியாவிலும் சில மாதங்கள் இருந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் வருகை தந்ததன் நோக்கம் தெரியவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் சந்தேகநபரை அவரது மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் - பேசாலை பகுதியிலுள்ள குறித்த தேவாலயத்திற்கு வந்து சென்ற நிலையில் நேற்றைய தினம் வட மாகாணத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.