பேருந்து பயணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி

பேருந்து பயணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி

பயணிகள் பேருந்து வரும் நேரத்தை இலகுவாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘MYBUS.lk’ செல்போன் செயலி (Mobile Passenger App) நாளைய தினம் அறிமுகப்படுத்தப்படும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் வரும் வரை பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது என்பதுடன், பேருந்துகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பயணிகளுக்கு இல்லை.

இந்த நிலைமையை ஆராய்ந்து, பயணிகள் பேருந்து வரும் நேரத்தை அறிந்து கொள்ளவும் அருகில் வரும் பேருந்து பற்றி தகவல்களை பெற்று கொள்ளவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தொலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.

பேருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இடம் மற்றும் முடிவடையும் இடம் வரையான நேரம், பயணிகள் பேருந்தில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையான தூரத்திற்கான கட்டணம், பயணிக்க போகும் பேருந்து அப்போது இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், இணையத்தளம் வழியாக பயணிகள் முறைப்பாடுகளை முன்வைக்கவும் முன்கூட்டியே பணம் செலுத்திய அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்தும் வசதிகளும் இந்த செயலியில் உள்ளன.

இந்த செயலியை உருவாக்கிய நுவன் சேனாரத்ன என்பவரை பாராட்டும் நிகழ்வையும் நாளைய தினம் நடத்துமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.