கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழப்பு -இந்தியாவில் பாதிப்பு நிலவரம்

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30.84 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 18297 அதிகம் ஆகும். மொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக உயர்ந்துள்ளது.

 

 

கொரோனா வார்டு

 

நேற்று ஒரே நாளில் 3645 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 30,84,814 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 15,00,20,648 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.