திருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்

திருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 386 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர். திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்." என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.