கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

 

தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.

 

அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார். 

18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.

 

 

205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ்  ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். என்றாலும் ராணா 11 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், ஷுப்மான் கில் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

 

3  விக்கெட்வீழ்த்திய ஜேமிசன்

 

அடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 25, மோர்கன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினர். ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த தவறிவிட்டனர். அந்த்ரே ரஸல் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது.

 

ஆர்சிபி அணியின் ஜேமிசன் 3 விக்கெட்டும், சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.