இந்தியாவில் தோன்றிய புதிய உருமாறிய கொரோனா - உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி இருப்பதாகவும், அது வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது:-

 


இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் பி.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பி1617 வம்சத்தை சேர்ந்தது.

இந்த வைரஸ், இ484கியூ, எல்452ஆர் என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது.

இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவுடனும், இந்த கொரோனா பரவிய இதர நாடுகளுடனும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினாா்.