ஞாயிற்றுக்கிழமைகளில் களைகட்டும் மெரினா கடற்கரை வெறிச்சோடியது - கொரோனா பரவலால் தடைவிதிப்பு

கொரோனா பரவலால் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதையடுத்து இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

மெரினா காமராஜர் சாலையில் இருந்து கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. கலங்கரை விளக்கம் அருகிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

இதனை தாண்டி யாரும் சர்வீஸ் சாலை மற்றும் மணல் பரப்புக்கு செல்ல முடியாத அளவுக்கு போலீசார் தீவிரமாக இன்று அதிகாலையில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் மெரினா கடற்கரைக்கு காலையிலேயே வருகை தந்தனர். அவர்களை போலீசார் கடற்கரைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள்.

நடைபயிற்சிக்கு வந்தவர்களும் மெரினா கடற்கரையில் ‘வாக்கிங்’ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரை காலையிலேயேகளை கட்டிவிடும். விடுமுறை நாள் என்பதால் பலர் பொழுதை கழிப்பதற்கு குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்துவிடுவார்கள். காதல் ஜோடிகளையும் அதிக அளவில் காணமுடியும்.

இன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

மெரினாவில் ஐஸ்கிரீம் கடைகள், துரித உணவகங்கள், பஜ்ஜி மற்றும் மீன் வறுவல் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று மற்ற நாட்களை விட அதிக அளவில் வியாபாரம் நடைபெறும்.

கோப்புபடம்

இன்று எந்த கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மெரினா சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.

மெரினா கடற்கரை கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படாமலேயே இருந்தனர்.

இதன்பிறகு 8 மாதங்கள் கழித்து டிசம்பர் 14-ந்தேதியே மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 3½ மாதங்களுக்கு பிறகு மெரினாவுக்கு செல்ல மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெரினாவுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தினசரி தடையாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்