குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தீ காயங்களிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பது எப்படி? சிகிச்சை அளிக்கும் முறை என்ன? என்ன முதலுதவி? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுப்பது? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

குழந்தைகளைக் காயங்களிலிருந்து, குறிப்பாகத் தீ காயங்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.  குறிப்பாக தீ காயம் என்பது அச்சமூட்டக்கூடிய ஒன்று.

தீ காயம் என்றால் பட்டாசு வெடிப்பதாலோ அல்லது கையில் தீ படுவதாலோ ஏற்படும் காயம் என்று அலட்சியமாக நினைத்து விட வேண்டாம். குழந்தைகளைப் பொருத்தவரை வெப்பமான எதைக் கையில் எடுத்துச் சுட்டுக்கொண்டாலும் அது தீ காயம்தான். சூடான உணவு, தண்ணீர், பாத்திரம் ஆகியவற்றைத் தொடுவதால் ஏற்படுவதோ, பட்டாசு வெடிக்கும்போது கையில் சுட்டுவிடுவதோ அல்லது வேறு ஏதேனும் தீ விபத்துகளோ குழந்தைக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

 


தீ காயங்களைப் பொருத்தவரை, காயம் ஏற்பட்டு அடுத்த சில நொடிகளில் தண்ணீரில் நனைக்க வேண்டும். தேங்கியிருக்கும் நீராக இல்லாமல், ஓடும் நீராக இருப்பது நல்லது. உடையைக் கழட்டுவதில் நேரத்தைச் செலவிடாமல் சுமார் 10 நிமிடம் வரையிலாவது, காயம் பட்ட குழந்தைக்கு இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கையை உலர வைத்து, அதன் தீவிரத்தைப் பார்க்க வேண்டும். பார்க்கும்போதே சில நாட்களில் ஆறிவிடுமா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதன் பிறகு மருத்துவரை ஆலோசிப்பதும் வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதும் செய்யலாம். எந்த காரணத்துக்காகவும் தண்ணீருக்குப் பதிலாக வேறு ஏதேனும் களிம்பைப் பயன்படுத்தக்கூடாது. அது காயத்தை ஆறவிடாமல் தடுத்து, அந்த இடத்தை மேலும் பாதிக்கும்.

பெரிய காயம் என்றால், தண்ணீரில், நனைத்தபடியே பிணியூர்திக்கு அழைத்துவிட வேண்டும். அல்லது உதவிக்கு யாரையாவது வாகனத்தைத் தயார் செய்யச் சொல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை, அது சில நிமிடங்களாக இருந்தாலும், தண்ணீர் முதலுதவி அவசியம்.

பெரும்பாலான காயங்களுக்குத் தண்ணீரில் நனைப்பதே போதுமானது. காயத்தைச் சுற்றிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடைக்க வேண்டாம். அந்த கொப்புளங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த உதவும்.

தண்ணீரில் குளித்த பிறகு, காயம் ஏற்பட்ட இடத்தை தூய்மையான துணி அல்லது நெகிழி காகிதத்தைக் கொண்டு மூட வேண்டும். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கலாம்.

வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, அதற்கேற்ற வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம்.

தயிர் குளிர்ச்சி தானே? வெண்ணெய் குளிர்ச்சி தானே என அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா எனக் கேட்காதீர்கள். தண்ணீரைத் தவிர எதையும் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு யாரோ கொடுத்த அறிவுரை போல, பற்பசை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது பார்த்திருப்பீர்கள். அதுவும் மிகத் தவறான விஷயம். மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தீ காயத்துக்கு முதலுதவி என்றால் அது தண்ணீர் மட்டும்தான்.