வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மரணம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மரணம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் 1940, 50-களில் சர் எவர்டன் வீக்ஸ், சர் கிளைட் வால்காட், சர் பிராங் வாரெல் ஆகியோர் பேட்டிங் தூண்களாக திகழ்ந்தனர். பார்படோசில் ஓரிரு கிலோமீட்டர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்த இவர்கள் ஒருசேர மூன்று வார இடைவெளியில் வெஸ்ட் இணடீஸ் அணிக்குள் நுழைந்து கோலோச்சினர். ‘மூன்று டபிள்யூ’க்கள் என்ற செல்லப்பெயருடன் வலம் வந்த இவர்களில் வாரெல், வால்காட் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இந்த ஜாம்பவான்களில் எஞ்சி இருந்த எவர்டன் வீக்ஸ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.

‘மூன்று டபிள்யூ’க்களில் எவர்டன் வீக்ஸ் தான் பேட்டிங்கில் நிறைய சாதனைகளை படைத்தார். 1948-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் 12 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் குறைந்த ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை கடந்த உலக சாதனையை ஹெர்பர்ட் சட்கிளப்புடன் (இங்கிலாந்து) பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் கூட தனது 13-வது இன்னிங்சில் தான் ஆயிரம் ரன்களை எட்டினார்.

மேலும் டெஸ்டில் தொடர்ச்சியாக 5 இன்னிங்சில் சதம் கண்ட ஒரே வீரர் என்ற பெருமையும் எவர்டன் வீக்ஸ் வசமே இந்த நாள் வரைக்கும் இருக்கிறது. அவர் 1948-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் (141 ரன்), இந்தியாவுக்கு எதிராக 4 சதமும் (128, 194, 162, 101 ரன்) இவ்வாறு தொடர்ச்சியாக இன்னிங்சில் அடித்திருந்தார். தொடர்ந்து 6-வது சதமும் அடித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் 90 ரன்களில் இருந்த போது, நடுவரின் தவறான தீர்ப்பால் ரன்-அவுட் ஆகிப்போனார்.

அவர் மொத்தம் 48 டெஸ்டுகளில் விளையாடி 15 சதம், 19 அரைசதத்துடன் 4,455 ரன்கள் (சராசரி 58.61) சேர்த்துள்ளார். டெஸ்டில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்களில் அதிக சராசரி வைத்துள்ள டாப்-5 பேட்ஸ்மேன்களில் வீக்சும் ஒருவர். காலில் அடிக்கடி காயம் அடைந்ததால் தனது 33-வது வயதிலேயே கிரிக்கெட்டை விட்டு விலகினார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், விளையாட்டு அலுவலர், ஐ.சி.சி. போட்டி நடுவர் என்று கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மறைந்த எவர்டன் வீக்சுக்கு புகழாரம் சூட்டியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், ‘எவர்டன் வீக்ஸ் ஒரு ஜாம்பவான், எங்களது ஹீரோ. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தந்தை. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். சிறந்த மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சச்சின் தெண்டுல்கர், ரவிசாஸ்திரி, கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், விவியன் ரிச்சர்ட்ஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.