ஒரே ஆண்டில் 3 ராசிகளில் பயணிக்கும் குரு... கொரோனா பரவலுக்கு பஞ்சாங்கம் கூறும் பகீர் காரணம்

ஒரே ஆண்டில் 3 ராசிகளில் பயணிக்கும் குரு... கொரோனா பரவலுக்கு பஞ்சாங்கம் கூறும் பகீர் காரணம்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. வைரஸ் பரவலுக்குக் காரணம் குரு பகவான் ஓர் ஆண்டில் மூன்று ராசிகளில் பயணித்ததே காரணம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்வரி ஆண்டில் தனுசு, மகரம், கும்ப ராசிகளில் குரு பயணித்தார். பிலவ ஆண்டில் மகரம்,கும்பம், மீன ராசிகளில் குரு பயணிப்பதால் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் பிலவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடையத்தொடங்கியுள்ளது. கொரோனா பற்றிய அச்சம் மக்களுக்கு இல்லாமல் போதே கொரோனா பரவலுக்கு காரணமாகி விட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினசரியும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பேர் வரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குரு பெயர்ச்சி

குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். சில மாதங்கள் அதிசாரமாக சென்று வருவார். மீண்டும் வக்ரமடைந்து நேர்கதிக்கு திரும்புவார். சுப கிரகமான குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். சார்வரி ஆண்டில் குரு பகவான் தனுசு, மகரம், கும்ப ராசிகளில் பயணம் செய்தார்.

சித்திரை முதல் பங்குனி வரை

சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருடத்தில் குருபகவான் 3 ராசிகளில் பயணித்தால் உலக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் கொடிய நோய் தாக்கும் என்றும் ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவித்துள்ளன.

சார்வரி ஆண்டில் சித்திரை முதல் ஆனி வரை குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் பயணம் செய்தார். ஆனி மாதம் 15ஆம் தேதி அதாவது ஜூன் 29ஆம் தேதி குரு பகவான் தனுசு ராசிக்கு திரும்பினார்.

தனுசு டூ மகர ராசி

குரு பகவான் தனுசு ராசியில் மகர ராசிக்கு கார்த்திகை 5ஆம் தேதி இடப்பெயர் அடைந்தார். சில மாதங்கள் அங்கு பயணித்த குரு பகவான் பங்குனி 23ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு செல்லப்போகிறார். ஓராண்டில் 3 ராசிகளில் குரு பிரவேசம் செய்வதே நோய் பரவலுக்குக் காரணம் என்கிறது தமிழ் பஞ்சாங்கம்.

2021 குரு பெயர்ச்சி எப்படி

பிலவ ஆண்டில் குரு பகவான் சித்திரை முதல் ஆவணி வரை அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஆவணி மாதம் 29ஆம் தேதி முதல் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி வரை மீண்டும் மகர ராசியிலும் பயணம் செய்கிறார். குரு பெயர்ச்சிக்கு பிறகு நேர்கதியில் கும்ப ராசிக்கு செல்கிறார் குரு பகவான்.

பங்குனி 30ஆம் தேதி பகல் 03.49 முதல் மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த ஆண்டும் 3 ராசிகளில் குரு பயணம் செய்கிறார் என்றாலும் சார்வரி ஆண்டினைப் போல பிலவ வருடத்தில் நோய் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்பில்லை என்றே பஞ்சாங்கம் கணித்துள்ளது.

நோய் தீர்க்கும் பரிகாரம்

நோய் பாதிப்புகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் நோய் தாக்கினாலும் விரைவில் குணமடையும் தினசரியும் வீட்டில் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கோவில்களில் நடைபெறும் யாகங்களில் பங்கேற்க வேண்டும். யாகம் நடத்த தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.