மன்னாரில் கொட்டிக்கிடக்கும் அதிஷ்டத்தால் தீவக பகுதி நீரில் மூழ்கி அழியும் பேராபத்து!

மன்னாரில் கொட்டிக்கிடக்கும் அதிஷ்டத்தால் தீவக பகுதி நீரில் மூழ்கி அழியும் பேராபத்து!

மன்னார் தீவகப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1 தொடக்கம் 10 மீற்றர் வரையான அளவு கீழே அமைந்துள்ளது.

மன்னார் கடல் எல்லைப் பகுதிகளை சூழ்ந்துள்ள மணல் மேடுகளும் பவளப் பாறைகளுமே கடல்நீர் இதுவரை காலம் உட்புகாமலும் சுனாமி போன்ற பேரனர்த்தங்கள் தாக்காமலும் பாதுகாத்து வருகின்றன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்வுபாடு, தோட்டவெளி பேசாலை, நடுக்குடா, தலைமன்னார் போன்ற கிராமப் பகுதிகளில் அதிகளவான மணல் மற்றும் மண்திட்டுகள் காணப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தின் நிலத்தடியில் 264.93 மெற்றிக் தொன் கனிய வளம் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக ஆகாய விமானங்கள் தயாரிக்க பயன்படும் மிக அரிதான பெறுமதி மிக்க தைத்தானியம் மற்றும் இல்மனைற் போன்ற விலை உயர்ந்த கனிய வளங்கள் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் சில இணைந்து இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தைத்தானியம் நிறைந்துள்ள மணலை அகழ்வு செய்ய செய்தி பரவியது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் குறித்த விடயம் அமைதியீனத்தை ஏற்படுத்தியது.

குறித்த ஆய்வில் 3704 வெவ்வேறு பகுதிகளில் ஆழமாக துளையிட்டு மணல் அகழ்வு செய்யப்பட்டு ஆய்வு இடம்பெற்றுள்ளதாகவும் மணல் அகழ்வு செய்து ஆய்வு மேற்கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஆய்வு மற்றும் அகழ்வில் உண்மைத் தன்மை இதுவரை மர்மமாகவே உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மன்னார் நகர் பிரதேச எல்லைக்குள் உள்ள தீவக பகுதிக்குள் சில நபர்கள் சுயதொழில் நடவடிக்கை என்ற போர்வையில் நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்புக்கு என்றெல்லாம் அரச காணிகளை பெற்று பாரிய கிடங்குகளை அமைத்து அவற்றை அகழ்வு செய்யும்போது கிடைக்கின்ற பாரிய அளவிலான மணலை மணல் விற்பனை முகவர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சில பகுதிகளில் அரச அபிவிருத்தி திட்டங்கள் என்ற அடிப்படையில் நடைபெறும் பாரிய செயற்திட்டங்களுக்கு ஆழமாக குழிகள் தோண்டப்பட்டு கொங்கிறீட் இடப்பட்டு குழிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.

மன்னார் தீவக பகுதிகளை அண்டிய பகுதிகளில் உள்ள கடல் தொடர்ச்சியான காற்று மற்றும் கடல் அலை காரணமாக முன்னோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறாக இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வுகள் காரணமாக தீவக பகுதி இன்னும் சில வருடங்களில் கடல் நீரினால் மூடப்படும் அபாயம் உள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற இவ்வாறான மணல் அகழ்வுகள் நிறுத்தப்படுவதுடன் மக்கள் தங்கள் பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வுகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுவதே பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

எனவே அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.