பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டாலும் அவர்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு தருணமும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

'அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்' எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு பெண் என்பவள் மகளாக, தாரமாக மற்றும் உலகின் உன்னத பதவியான தாயாகவும் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறாள். எனவே, பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறையையும், பாகுபாட்டையும் நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களது உயர்வின் மூலமான சமூக நலனுக்கான வாய்ப்புக்களை நாம் நாடு என்ற ரீதியில் அனுபவித்து வருகின்றோம்.

வரலாற்றில் விகாரமஹா தேவி முதல் நவீன காலத்தில் உலகின் முதலாவது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வரை இலங்கை பெண்களின் வீரமும் தலைமைத்துவமும் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த செல்வாக்கிற்கு ஏற்ப எமது நாட்டுப் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை கொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்கள் பங்களிப்பு செய்வதை நாம் பாராட்டுகின்றோம். சமுதாயத்தின் மிகச்சிறிய அலகான குடும்பத்தை பாதுகாக்க பாடுபடும் பெண்கள் இறுதியாக முழு நாட்டையும் பாதுகாக்க பங்களிப்புச் செய்கின்றார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.