டேம் வீதி சம்பவம் தொடர்பில் விசேட காவல் துறை குழுவினரின் அதிரடி நடவடிக்கைகள் (காணொளி)

டேம் வீதி சம்பவம் தொடர்பில் விசேட காவல் துறை குழுவினரின் அதிரடி நடவடிக்கைகள் (காணொளி)

டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலத்தில் துண்டிக்கப்பட்ட தலையை தேடி இன்று மூன்றாவது நாளாகவும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கொழும்பில் இருந்து சென்ற விசேட காவல்துறை குழு தமது விசாரணைகளை இன்று காலை ஆரம்பித்தது.

டேம் வீதி காவல்துறை பொறுப்பதிகாரி, ஆட்டுப்பட்டித்தெரு காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு நேற்று கொழும்பில் இருந்து புத்தல நோக்கி சென்றது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய உபகாவல்துறை பரிசோதகர் கொழும்பில் இருந்து பேருந்தில் பயணித்து புத்தல நகரில் இறங்கிய இடத்திலிருந்து அவரது வீடு வரையிலான பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக குறித்த விசாரணை குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் புத்தல நகரில் இறங்கி அவரது நண்பர் ஒருவரின் உதவியுடன் உந்துருளியில் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் குறித்த பிரதேசத்திலுள்ள மூவரிடம் விசாரணை குழு வாக்குமூலம் பெற்றுள்ளது.

இதுதவிர, கொலை செய்யப்பட்ட யுவதியும் குறித்த உபகாவல்துறை பரிசோதகரும் தங்கியிருந்த விடுதியில் ஹங்வெல்ல காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட தலை தொடர்பான எந்த தகவல்களும் இதன்போது கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.