புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்து போக சுரங்கப்பாதை அமைப்பு

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் முக்கோண வடிவில் கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ.971 கோடி ஆகும்.

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், எதிர்காலத்துக்கு தேவையான இடவசதிகள் போதாது என்பதாலும் புதிய நாடாளுமன்றம் ‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் முக்கோண வடிவில் கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ.971 கோடி என மதிப்பிடப்பட்டு டாடா நிறுவனத்திடம் டெண்டர் கொடுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தையொட்டி மேலும் சில கட்டுமானங்களும் சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன. அதில் முக்கியமானது ராஜபாதை விரிவாக்கம். தற்போது இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை வரையுள்ள நேரான சாலை ராஜபாதையாக உள்ளது. இந்த ரோடு புதிய நாடாளுமன்றத்தையும் இணைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் இந்த ராஜபாதையை சுற்றியே அமைய உள்ளன.

இதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்றத்தின் அருகில், தற்போது உள்ள வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பிரதமருக்கும், துணை ஜனாதிபதிக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதைப்போல எம்.பி.க்களுக்காக ‘ஸ்ரம் சக்திபவன்’ வளாகத்தில் அறைகள் கட்டப்பட உள்ளன.

இந்த கட்டுமானங்களோடு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்றொரு கட்டுமானம் சுரங்கப்பாதைகள் ஆகும். அதாவது, நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும்போது பிரதமர், துணை ஜனாதிபதி மற்றும் எம்.பி.க்கள் வந்து செல்லும் பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

இதை தவிர்க்கும் வகையிலும், பிரதமர், துணை ஜனாதிபதி போன்ற மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டும் பிரதமர், ஜனாதிபதியின் வீடுகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல எம்.பி.க்கள் அறைகளில் இருந்தும் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல இயலும். மேற்கண்ட தகவலை நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த சுரங்கப்பாதைகளில் மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.