சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைக்கப்பட்ட பிள்ளையார் காணாமற் போனார்

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைக்கப்பட்ட பிள்ளையார் காணாமற் போனார்

பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ9 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கிழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லைப் பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப் போவதாகவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கடந்த வாரம் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பிள்ளையாருக்கு பதிலாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதனை சட்டத்தை காட்டி அதிகாரிகள் அகற்றுவார்களா எனவும் கேள்வி எழுப்பும் பொது மக்கள் மத ரீதியாக பாரபட்சங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்