கொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...!

கொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...!

மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் அபாயம் மீண்டும் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் அதிகளவான நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

480 பேர் கொழும்பில் நேற்று பதிவாகிய நிலையில், அவர்களில் 232 பேர் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அழுத்கே, கொரோனா நோயாளர்களுக்காக வைத்தியசாலைகளில் ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கையானது அதன் கொள்ளளவை தற்போது அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் அதிகளவான நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டம் முழுவதிலும் தொற்று பரவியுள்ளமை பாரிய நிலைமையாகும்.

எந்தக் காரணத்தினால் கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்னர் இருந்ததைப்போல மேல் மாகாணத்தில் அபாய நிலை மீண்டும் அதிகரித்துள்ளது.

நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களில் நேற்றைய தினம் 75 சதவீத நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாளில் 423 பேர் குணமடைந்த நிலையில், 843 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனடிப்படையில், சிகிச்சைக் கட்டமைப்புக்குள் 420 புதிய கட்டில்களின் தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறாக குணமடைந்து வெளியேறுபவர்களை விடவும் இரண்டு மடங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், எதிர்வரும் நாட்களில் கட்டமைப்பு ரீதியான பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டும்.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் கொவிட்-19 சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கை நூற்றுக்கு நூறு வீத கொள்ளளவை அண்மிக்கிறது.

எனவே, நோய் அறிகுறிகளுடன் புதிதாக அடையாளம் காணப்படும் நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அழுத்கே கூறியுள்ளார்.