கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். தியாகராஜன் இறந்த தினம்: ஜூன் 27- 2007

கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். தியாகராஜன் இறந்த தினம்: ஜூன் 27- 2007

டி. எம். தியாகராஜன் (மே 28-1923, ஜூன் 27-2007) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார்.

இவர் தஞ்சாவூரில் பிரபலமான இசை நாட்டிய விற்பன்னர்களின் வழித்தோன்றலாவார். அவரது பாட்டனாரும், கொள்ளுப் பாட்டனாரும் பரோடா அரண்மனையின் ஆஸ்தான வித்துவான்களாக இருந்துள்ளனர். தற்போது இந்தக் குடும்ப உறுப்பினர் வதோதராவில் தஞ்சோர்கார் என்ற பெயரோடு வாழ்ந்து வருகிறார்கள். இவரது தந்தை மகாலிங்கம் பிள்ளை ஒரு மிருதங்க வித்துவான். தாயார் சீதாலட்சுமி அம்மாள்.

 


தியாகராஜன் முதலில் தனது தந்தையிடம் இசை பயின்றார். பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் குருகுல முறையில் மாணாக்கரானார்.

தியாகராஜன் தனது எட்டாவது வயதில் முதலாவது இசைக் கச்சேரி செய்தார். அதனைக் கேட்டு மிகவும் ஆனந்தம் அடைந்த தாளவாத்திய விற்பன்னரான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கச்சேரி முடிந்ததும் தியாகராஜனைத் தமது இரு கைகளிலே தூக்கி தமது பாராட்டைத் தெரிவித்தார்.

டி. எம். தியாகராஜன் அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சி சேவைகளிலும், அரங்குகளிலும் ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். தொடக்கத்தில் அவருக்கு அவரது தந்தையார் அல்லது அவரது சகோதரர் தம்புசுவாமி மிருதங்கம் வாசித்தனர். மற்றொரு சகோதரரான பாலசுப்பிரமணியம் வயலின் வாசித்தார். துரதிர்ஷ்டவசமாக சகோதரர்கள் இருவரும் ஒரே மாதத்தில் உயிரிழந்தனர். இதனால் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் என ஒரு குழுவாக அக்குடும்ப உறுப்பினர் செயற்படும் வாய்ப்பினை அக்குடும்பம் இழந்தது.

அவர் மிகக் கூடுதலான கீர்த்தனைகளை அறிந்து வைத்திருந்ததுடன் அவற்றை மிகுந்த கற்பனைகளுடன் படைக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியராகவும் உதவித் தலைவராகவும் ஈற்றில் தலைவராகவும் பணியாற்றி 1981 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பின்னர் சென்னை மியூசிக் அகாதமி நடத்திய இசை ஆசிரியர்களுக்கான கல்லூரியின் தலைவராக பணியாற்றினார்

டி. எம். தியாகராஜன் தனது கொள்கையில் உறுதியானவர். கச்சேரி வாய்ப்பு கேட்டு யாரிடமும் செல்லமாட்டார். சாஸ்த்ரீய இசை கடைபிடிப்பதில் விட்டுக் கொடுக்கமாட்டார். இதனால் எல்லா இசை வித்துவான்களும் அவரை மதித்தனர். அவரிடம் இசை கற்பதற்கு பலர் விரும்பினர். அவர் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர்.

நீண்ட கால உடல்நலக்குறைவுக்குப் பின் 2007-ம் ஆண்டு ஜூன் 27-ம் நாள் சென்னையில் காலமானார்.

பெற்ற விருதுகள்:-

* கலைமாமணி விருது, வழங்கியது: தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம். * சங்கீத கலாநிதி விருது, 1981 வழங்கியது மியூசிக் அகாதமி, சென்னை * சங்கீத நாடக அகாதமி விருது, 1982 வழங்கியது: சங்கீத நாடக அகாதமி * சங்கீத கலா நிபுணா, 1988 வழங்கியது: மைசூர் ஃபைன் ஆர்ட்ஸ் * சங்கீத சூடாமணி விருது, 1974 வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா சென்னை