எதிர்காலத்தில் மீண்டும் கருணாவிடம் விசாரணை நடக்கும் - சி.ஐ.டி

எதிர்காலத்தில் மீண்டும் கருணாவிடம் விசாரணை நடக்கும் - சி.ஐ.டி

மீண்டும் எதிர்காலத்தில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக குற்றத் தடுப்பு திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கருணாவின் கூற்று தொடர்பில் நேற்றைய வாக்குமூலத்தையடுத்து கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

“மீண்டும் எதிர்காலத்தில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை கருணா அம்மானின் மேற்படி சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருணா அம்மான் நேற்றைய தினம் கொழுபிலுள்ள அவரது இல்லத்திருந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களமானது மேற்படி அவரது கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு கடந்த 23ம் திகதி கருணா அம்மானுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

எனினும் அன்றைய தினம் அவர் சுகவீனம் காரணமாக வாக்குமூலம் வழங்குவதற்கு சமுகமளிக்க முடியாது என அவரது சட்டத்தரணி ஊடாக திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.அந் நிலையில் அவரது கூற்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த குழு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேவேளை மேற்படி பொலிஸ் குழுவானது கருணா அம்மான் கருத்தை தெரிவித்த அரசியல் கூட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களிடமும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பான இறுவெட்டையும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றத்தடுப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.