தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன?

கவனக் குவிப்பையும் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்க ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்வது மட்டுமல்லாமல் அச்செயலை செய்து முடித்த பின்பே அடுத்த செயலை துவங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு வகையில் மனித வாழ்வில் செளகரியத்தையும் அசாத்தியமான மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் அது புதுப்புது சிக்கல்களையும் உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. குறிப்பாக உளவியல் ரீதியிலான எதிர்மறை மாற்றங்களைச் சொல்லலாம். ஆழ்ந்து சிந்திப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் குவிப்பது என்பதெல்லாம் இன்றைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது! யூட்யூபில் காணொளி பார்க்கும்போது, வாட்ஸ் அப் மெசேஜ் வந்ததும் பாதியிலேயே காணொளியை நிறுத்திவிட்டு அதற்குப் பதில் தரப் போய்விடுகிறோம். சட்டென பேஸ்புக்கைத் திறந்து துலாவத் தொடங்கிவிடுகிறோம். இப்படியே குறைந்தது முப்பது நிமிடங்கள் நம்மை அறியாமல் காணாமல் போய்விடுகின்றன. இதற்கிடையில் அவசியமான வேலைகளைத் தவறவிட்டு விடுகிறோம். இப்படித்தான் பலருக்கும் நேர்கிறது. இப்போதெல்லாம் எவ்வித சுவையுடன் கூடிய உணவை உட்கொள்கிறோம் என்கிற விழிப்புணர்வு கூட இல்லாமல் தொலைக்காட்சியிலோ இணையதளத்திலோ நாம் தொலைந்து போய்விட்டோம் என்பதே உண்மை. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் நமக்கு நேர விரயம் ஆகாது என்பது நம்மில் சிலரது‌ நம்பிக்கை. ஆனால், ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதற்கு நேர் எதிராக உள்ளன. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது ஒருவரின் செயல் திறனை குறைப்பதாக அவை கூறுகின்றன. Also see: மனித மூளையால் ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான கட்டளைகளை உள்வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், மிகச் சிலவற்றையே செயலாக்கம் செய்ய முடியும். ஒரே நேரங்களில் பல வேலைகளைச் செய்யும்போது நாம் ஒரு வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு மற்றொன்றுக்கு தவிக்கிறோம். இவ்வாறு செய்யும்பொழுது கவனச் சிதறல் ஏற்பட்டு மூளையின் செயல்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அதிக அளவில் கவனச் சிதறலைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கவனக் குவிப்பையும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் வேண்டுமானால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலைச் செய்வது, அதைச் செய்து முடித்த பிறகு அடுத்த வேலையைத் தொடங்குவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெளியில் சென்று விளையாடுதல், தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவை மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதனுடைய ஆற்றலை அதிகரிக்கும். தொழில்நுட்ப சாதனங்களின் அலை நம்மை மூழ்கடிக்காமல் இருக்கட்டும். அதுவே நம் உடல்நலனுக்கும் உளநலனுக்கும் நன்மை பயக்கும். - வீரச்செல்வி மதியழகன்