உலக கோப்பை மேட்ச் பிக்சிங்: பிசிசிஐ, ஐசிசி-யும் விசாரணை நடத்த வேண்டும்- அரவிந்த டி சில்வா

உலக கோப்பை மேட்ச் பிக்சிங்: பிசிசிஐ, ஐசிசி-யும் விசாரணை நடத்த வேண்டும்- அரவிந்த டி சில்வா

2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது. இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக இலங்கையின் முன்னாள் மந்திரி மஹிந்தநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு சங்ககரா, ஜெயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இலங்கையின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த அரவிந்த டி சில்வா உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த ஐசிசி, பிசிசிஐ பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேபண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் டி சில்வா கூறுகையில் ‘‘இதுபோன்ற குற்றச்சாட்டை கூறும்போது, ஏராளமான ரசிகர்கள் மற்றும் வீரர்களை பாதிக்கும். இது நமக்கு மட்டுமல்ல தேர்வாளர்கள், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் எல்லோருக்கும் பிரச்சினைதான். ஆனால் இந்திய வீரர்கள் தகுதியுடன்தான் உலக கோப்பையை வென்றார்கள். நாம் விரும்பும் கிரிக்கெட்டின் நன்மைக்கான மேட்சி பிக்சிங் நடைபெறவில்லை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

நாம் மக்களை பொய்யோடு இருக்கும்படி அனுமதிக்கக் கூடாது. ஐசிசி, பிசிசிஐ. இலங்கை கிரிக்கெட் போர்டு என ஒவ்வொருவரும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

நாம் உலக கோப்பையை வென்று கொண்டாடியதுபோல், சச்சின் போன்ற வீரர்கள் உலக கோப்பையை வென்று சந்தோசத்தை வெளிப்படுத்திய தருணத்தை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்திருப்பார்கள். சச்சின் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், உண்மையான திறமையுடன் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்களா? என்பதைப் பார்க்க ஒரு பாரபட்சமில்லாத விசாரணையைத் தொடங்குவது இந்திய அரசு மற்றும் பிசிசிஐ-யின் கடமையாகும் என விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

இவை அனைத்தும் மோசமான குற்றச்சாட்டுகள், அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் ஐ.சி.சி.-யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்றிருக்க வேண்டும்’’ என்றார்.