ஆணவப் படுகொலை வழக்கின் திருப்புமுனையாக மூவரை விடுதலை செய்தது நீதிமன்றம்!

ஆணவப் படுகொலை வழக்கின் திருப்புமுனையாக மூவரை விடுதலை செய்தது நீதிமன்றம்!

உடுமலை ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன்  குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை உட்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனால்  விடுதலையை எதிர்த்து பொலிஸார்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன்  ஸ்டீபன் ராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை,  மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த சங்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கௌசல்யா ஆகியோர் 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தனர்.

குறித்த திருமணத்திற்கு கௌசல்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  கடந்த 2016 மார்ச் 13-ம் திகதி  உடுமலை சாலையில் மனைவி கௌசல்யாவுடன் சென்ற சங்கர்  அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கௌசல்யாவின் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தான் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து கௌசல்யாவின்  பெற்றோர்,  தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்  கௌசல்யாவின் தந்தை சின்னசாமி,  உள்ளிட்ட 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.   அத்துடன்  ஸ்டீபன் ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும்,  மணிகன்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்  விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  மரண தண்டனையை உறுதி செய்ய கோரும் நடைமுறைப்படி  குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம்  மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்கானிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில்  தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.