சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்கும் முயற்சி! நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்கும் முயற்சி! நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுநோயை ஒழிக்க நேரடியாக பங்களிக்கும் "1990 சுவசெரிய" அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளையும் தகவல்களையும் மறைக்க தொழிற்சங்க நிர்வாக அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளை வெளிப்படுத்தும் செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதன் நிர்வாக அதிகாரி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தொழிற்சங்க அமைப்பு ஒன்று இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

சுவசெரிய சேவையின் நிர்வாக அதிகாரியால் தன்னிச்சயைான தீர்மானத்திற்கு அமைய, தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க அமைப்பின் தலைவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளை வெளிப்படுத்திய காரணத்திற்காக, சுவசெரிய சேவையில் பணியாற்றும் ஊழியர்கள், நியாயமற்ற முறையில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தகவல்களை மறைக்க அதன் நிர்வாகம் முயற்சிப்பதாக, உழைக்கும் மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது. சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை கொரோனா தொற்று நோயை ஒழிப்பதில் நேரடி பங்களிப்பாளராக இருந்தபோதிலும், அதன் செயற்பாடுகளை நேரடியாக மேற்பார்வையிடுவதாகத் தெரியவில்லை என சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த நிறுவனம் தற்போதைய அமைச்சரவையின் கீழ் சுகாதார அமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட காலமாக சுகாதார அமைச்சுடன் தொடர்புபடாத ஒரு அமைச்சின் கீழ் தன்னிச்சையாக செயற்பட்டு வந்தது, எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழும், பழைய நிர்வாகத்திற்கு தேவைக்கேற்ப செயற்பட்டு வருவதாக தெரிகிறது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையின் பிரச்சினைகள் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சருக்கு காணப்படுவதாகவும், இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமளிக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இல்லையென்றால், தொழிற்சங்கங்களின் அடக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு நேரடி நடவடிக்கை எடுக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த கடிதத்தில் "உழைக்கும் மக்கள் சக்தி" தொழிற்சங்க அமைப்புக் குழு சார்பாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.