ஆணுக்கு நிகராக பெண்களின் வெற்றி

இன்று ஆணுக்கு நிகரான ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஜனாதிபதி வரை பதவிக்கு பெண்கள் வந்து விட்டார்கள். ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரையில் பெண்கள் முன்னேறி விட்டார்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கனியன் பூங்குன்றனார். இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறிய காலம் மாறி பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் என்ற காலம் இப்போது வந்து விட்டது. 

 

இன்று ஆணுக்கு நிகரான ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஜனாதிபதி வரை பதவிக்கு பெண்கள் வந்து விட்டார்கள். போலீஸ்துறையில் காவலர் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி வரையில் பெண்கள் பணியாற்றி வெற்றி நடை போடுவதையும் நம்மால் காணமுடிகிறது. சாதாரண உதவியாளர் முதல் கலெக்டர் வரை மங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். சாதாரண நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகிக்கிறார்கள். இது பெருமைக்குரியது அல்லவா. ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரையில் பெண்கள் முன்னேறி விட்டார்கள். 

 

இது பாராட்டுக்குரியது அல்லவா? விஞ்ஞான ஆய்வாளர் முதல் விண்வெளி பயணம் செய்யும் வெற்றி வீராங்கனையாக திகழ்கிறாள் பெண். கல்வியை எடுத்துக்கொண்டால் எந்த தேர்வானாலும் பெண்களே அதிக வெற்றி பெறுகிறார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொரோனா எனும் கொடிய வைரசை எதிர்த்து போராடுவதிலும், மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் ஆற்றும் பணி மகத்தானது. 

 

 

அது மட்டுமல்ல இவைகளோடு சேர்த்து தங்கள் குடும்ப நிர்வாகத்தையும் திறம்பட செய்து கொண்டு இருக்கிறார்கள். தன் கணவருக்கு நல்ல ஆலோசகராக, குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள். பெண்கள் பொறுமையால் சிறந்து விளங்கியதால் தான் தாய் நாடு, தாய் மொழி என்று அழைக்கின்றோம். பெண்களிடம் பொறுப்புணர்வு, கடமை, பொறுமை, திறமை, துணிவு, பணிவு அனைத்தும் அமைந்திருப்பதால் தான் எதையும் தாங்கும் இதயம் அவர்களிடம் இருக்கிறது. பெண்களின் சிறப்பை கவிமணி கூறும்போது, மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்கிறார்.

 

தங்களது உழைப்பாலும், விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பல்வேறு இன்னல்களை வென்று இன்று பல துறைகளில் சிறந்து விளங்கி நாடும், வீடும் உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணித்து வாழும் பெண்களை நாளெல்லாம் போற்றுவோம்.