கொரிய தீபகற்பத்தில் மோதல் போக்கு: படைகளை உசார் நிலையில் இருக்குமாறு தென்கொரியா உத்தரவு!

கொரிய தீபகற்பத்தில் மோதல் போக்கு: படைகளை உசார் நிலையில் இருக்குமாறு தென்கொரியா உத்தரவு!

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு இடையே இராணுவ நிலைகளை வலுவாகப் பராமரிக்குமாறு தென்கொரிய இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தென் கொரியாவின் இராணுவத் தளபதி, மூத்த இராணுவ அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது தென் கொரியப் படைகள் அவற்றின் நிலைகளை உறுதியாகப் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என யோன்ஹப் (Yonhap News Agency) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இரகசியத் தகவல்களைத் தென்கொரியா வெளியிட்டு வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது. மேலும், இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்த்தது.

மேலும், தென் கொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அண்மையில் வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து எல்லையில் இராணுவத்தை குவித்துவருகிறது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவிவருகிறது.

இந்நிலையில் தென் கொரியாவுக்கு எதிராக வடகொரியா எடுத்த சமீபத்திய நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக, உலக நாடுகளின் எதிர்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. வட கொரியாவின் இந்த அத்துமீறல்களை தென் கொரியா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாகவே தென் கொகொரியா செயற்பட்டு வந்தது.

இருப்பினும், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு வடகொரியா செவி சாய்க்காமல் இருந்துவந்தது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் இடையே இறுதியாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தென் கொரியா – வடகொரியா இடையே தற்போது மோதல் போக்கு வலுத்துள்ளது.