கொரோனா வைரஸினால் பிரேசிலில் 1 மில்லியன் பேர் பாதிப்பு

கொரோனா வைரஸினால் பிரேசிலில் 1 மில்லியன் பேர் பாதிப்பு

மோசமான பொருளாதாரத்தை கொண்டுள்ள பிரேசில் நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுமார் 1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளது.

பிரேசிலில் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் மற்றும் இறப்புகள் இரண்டிலும் பிரேசில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது.

அந்தவகையில் பிரேசில் வெள்ளிக்கிழமை 10 இலட்சத்து 38 ஆயிரத்து 568 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் அடையாளம் கண்பட்டுள்ளதுடன் 1,206 புதிய இறப்புகளுடன் மொத்த இறப்புகளை 49 ஆயிரத்து 90 ஆகக் கொண்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக நேற்று மட்டும் புதிதாக 55 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் இன்று சனிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டக்கூடும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் இதுவரை 87 இலட்சத்து 58 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 4 இலட்சத்து 62 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.