அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

பொதுத் தேர்தலை நடத்துவதற்காக சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டல் கோவை தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் தெளிவுபடுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளையும், உதவித் தேர்தல் ஆணையாளர்களையும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

சமூக இடைவெளியை பேணுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் என்பன சுகாதார அமைச்சின் வழிகாட்டல் கோவையில் முக்கிய அம்சங்களாகும்.

 

அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்பட வேண்டிய முறைமை, அதற்காக எந்த அரச உத்தியோகத்தர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் முதலான விடயங்களும் குறித்த வழிகாட்டல் கோவையில் உள்ளடங்கியுள்ளன.

 

அத்துடன், தேர்தல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டிய முறைமை, வீட்டுக்கு வீடு செல்லும் பிரசாரப் பணிகள், தேர்தலன்று வாக்களிப்பு நடத்தப்பட வேண்டிய முறைமை மற்றும் வாக்குகளை எண்ணும் பணிகள் என்பன தொடர்பில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினம், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.

 

இதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முறைப்பாட்டு விசாரணை காரியாலயங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இதேவேளை, சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.