உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் - சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்

உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் - சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவி சார்ஜா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். 39 வயதே ஆகும் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்நிலையில், கணவரை பிரிந்து வாடும் மேக்னா, கணவர் குறித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சிரு, நான் உன்னிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக்கி சொல்ல மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் - இவை அனைத்தையும் விட மேலானவன் நீ. என் ஆன்மாவின் ஒரு அங்கம் நீ.

நான் ஒவ்வொரு முறையும் வாசல் கதவைப் பார்க்கும்போதும் இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. நீ உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதை பார்க்க முடியவில்லையே என்று. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயம் மூழ்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீ என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறாய்.

நீ என்மீது அளவில்லா காதல் வைத்திருப்பதால்தான் உன்னால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீ எனக்குத் தந்த விலை மதிப்பில்லா பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

உன்னை நம் குழந்தை வடிவில் இந்த பூமிக்குக் மீண்டும் கொண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உன்னை குழந்தையாக என் கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருக்கிறேன். உன் சிரிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உன் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும்  எனக்காகக் காத்திரு. என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய். நீ என்னுள் இருக்கிறாய்." என குறிப்பிட்டுள்ளார்.