வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது

வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது

மொரட்டுவை - சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை வழிநடத்திய குடு அஞ்சு என்பவர், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய 4,900 இலட்சம் ரூபா பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரியவர் சட்டத்தரணி ஊடாக காவல்துறையில் சரணடைந்த நிலையில், மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். அவர், பிலியந்தலை - மடபான - தொம்பே பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடு அஞ்சு என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தை டுபாயிலிருந்து வழிநடத்தும் தர்மசிறி என்பவரின் ஆலோசனைக்கு அமைய, போகுந்தர பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் குறித்த நபரினால் அந்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்மலானை – ஜயசுமனாரம மாவத்தை பகுதியில் மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகளால் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைக்கு அமைய குறித்த வங்கி கணக்கு தொடர்பில் தெரியவந்துள்ளது.

குறித்த வங்கி கணக்கு இலக்கத்தினை காவல்துறையிடம் வழங்கியுள்ள குறித்த சந்தேக நபர், போதைப்பொருள் வர்த்தக்தின் ஊடாக ஈட்டிய பணத்தை அந்த வங்கி கணக்கில் வைப்பிலிடுவதாக தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி வரை குறித்த வங்கி கணக்கில் 4 ஆயிரத்து 900 லட்சம் ரூபாய் பரிமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இரத்மலானை பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் குறித்த வங்கி கணக்கில் இறுதியாக எஞ்சியிருந்த 7 லட்சத்திற்கும் அதிக பணம் மீளப்பெறப்பட்டு வங்கி கணக்கு மூடப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த வங்கி கணக்கு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையின் அது தம்பே – மடபாத பகுதியை சேர்ந்த ஒருவருடையது என கண்டறிந்துள்ளனர்

பின்னர் அந்த முகவரிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதும் சந்தேகநபர் அங்கு இல்லாத நிலையில் புத்தல - ஹந்தபானாகல பகுதியில் உள்ள வீடான்றில் அவர் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.


பின்னர் காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்த போது அங்கும் அவர் இல்லாத நிலையில் அவரின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர். அதில் தமது கணவர் நீண்டகாலமாக வீட்டுக்கு பிரவேசிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


பின்னர் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்த காவல்துறையினர் சந்தேகநபரின் உறவினர் ஒருவரை கைது செய்ததுடன் குறித்த வங்கி கணக்கின் உரிமையாளரை இரண்டு நாட்களுக்குள் காவல்துறைக்கு அழைத்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை பிணையில் விடுவித்துள்ளனர். இதற்கமைய குறித்த வங்கி கணக்கின் உரிமையாளர் சட்டத்தரணி ஊடாக காவல்துறையில் சரணடைந்துள்ளார்.


இதன்போது, தமக்காக வங்கி கணக்கு ஒன்றை திறக்குமாறு பேஸ்புக் ஊடாக தற்போது டுபாயில் உள்ள தர்மசிறி என்பவர் அறிவித்தாக சந்தேகநபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.


இணையத்தளம் ஊடாக பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியவாறு குறித்த வங்கி கணக்கை திறந்த பின்னர் தர்மசிறி என்பவரால் சந்தேகநபருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த வங்கி கணக்கின் ஏ.டி.எம் அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தையும் தாம் அனுப்பும் ஒருவரிடம் வழங்குமாறு தமர்சிறி, சந்தேகநபரிடம் குறிப்பிட்டுள்ளார்.


வங்கி கணக்கு திறக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என சந்தேகநபர், காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ள போதும் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


குறித்த வங்கி கணக்கை மூடுமாறு குறித்த சந்தேக நபருக்கு டுபாயில் உள்ள தர்மசிறியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதன்போது வங்கி கணக்கில் 7 லட்சத்து 53 ஆயிரம் பணம் காணப்பட்டதாகவும் அதில் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு எஞ்சிய பணத்தை பிலியந்தலை பகுதியில் உள்ள வங்கியொன்றில் குறித்த சந்தேகநபர் வைப்பிலிடப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் அது குறித்த வங்கி கணக்கு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்றவியல் பிரிவு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.