வெள்ளைவானில் கடத்தப்பட்ட மாணவர்கள்! உடனடியாக கைது செய்து முன்னிலைப்படுத்துங்கள்!

வெள்ளைவானில் கடத்தப்பட்ட மாணவர்கள்! உடனடியாக கைது செய்து முன்னிலைப்படுத்துங்கள்!

ஸ்ரீலங்கா கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்து முன்னிலையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர் ஏற்கனவே பிணை அனுமதி பெற்றுள்ள நிலையிலேயே நீதிமன்றம் நேற்றைய தினம் இந்த உத்தரவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றது.

குறிப்பாக இந்த வழக்கில் பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை தலைமறைவாக இருப்பதற்கு உதவியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியும், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையே நேற்று நடைபெற்றது.

இதன்போது பிணையில் உள்ள சந்தேக நபர்களான லக்சிறி அமரசிங்க எனும் தென்னத்தோப்பு உரிமையாளரும் அதேபோல ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவும் முன்னிலையாகியிருந்தனர். லக்சிறி அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிசும், அட்மிரல் ரவீந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பிரசன்னமாகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன பிரசன்னமானார். விசாரணையாளர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சி.ஐ.டி.யின் அதிகாரி, இந்த விவகாரத்தில் லெப்டினன் கமாண்டர் ஹெட்டி ஆரச்சியை சந்தேக நபராக முன்னிலையாக்குவது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினார்.

இதன்போதே, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தின் பிரதிவாதியான கடற்படையின் முன்னாள் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ரவீந்திர விஜயகுணவர்தன மற்றும் லக்சிறி அமரசிங்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி தப்பிச் சென்ற நபரை அவ்விவகாரத்தில் சந்தேக நபராக முன்னிலைப்படுத்தப்படாமை தொடர்பில் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் சந்தேக நபர், வழக்கில் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப்படவேண்டிய சந்தேக நபர் என சுட்டிக்காட்டிய நீதிவான், அவரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.