மாற்றமில்லை! இந்திய எல்லையில் தொடரும் பதற்றம்- சீனாவிலிருந்து வெளியான தகவல்

மாற்றமில்லை! இந்திய எல்லையில் தொடரும் பதற்றம்- சீனாவிலிருந்து வெளியான தகவல்

கிழக்கு லடாக் அருகே அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இராணுவ தாக்குதல்களால் தொடர்ந்தும் பதற்றம் நீடித்திருக்கும் நிலையில், இந்திய இராணுவத்தினர் மீது சீனா பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான தி குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில்,

கிழக்கு லடாக் அருகே அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை இருக்கிறது அதில் மாற்றமில்லை. இந்திய வீரர்கள் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தியதால்தான் இருதரப்பும் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் கூறுகையில் “ கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன இராணுவத்தினர் தீவிரமான மோதலில் ஈடுபட்டார்கள். இதில் இந்தியத் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள், எங்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

அதன்பின் தி குளோபல் டைம்ஸ் நாளேடு ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சீன இராணுவம் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதை குளோபல் டைம்ஸ் ஒரு போதும் கூறவில்லை. எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதையும் உறுதி செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது

பின்னர் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் மற்றொரு ட்விட்டர் பதிவில் எனது புரிதல் என்னவென்றால், இரு தரப்பு இராணுவத்திலும் உயிரிழப்பு எண்ணிக்கையை ஒப்பிடுவதை சீன தரப்பு விரும்பவில்லை, இதனால் இரு தரப்பு மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைத் தவிர்க்க முடியும். இது சீனாவின் நல்லெண்ணமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்ததாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சீன இராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது

45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா இராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.