‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் : காதல் கணவர் ஏற்க மறுத்ததால் வி‌‌ஷம் குடித்த பெண்

‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் : காதல் கணவர் ஏற்க மறுத்ததால் வி‌‌ஷம் குடித்த பெண்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வி(வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த தீபக்கும்(26) காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் 2 பேரும் இருவருடைய வீட்டுக்கும் தெரியாமல் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 


இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தீபக், முத்துசெல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததுடன், அவரை ஏற்க மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துசெல்வி உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மடத்துக்குளம் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முத்துசெல்வி, தீபக் மற்றும் இருவரின் பெற்றோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தனர்.

திருப்பூர் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா தலைமையில் இருவருக்கும் கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது தீபக், முத்துசெல்வியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த முத்துச்செல்வி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிப்பிடத்துக்கு சென்று நேற்று மதியம் வி‌‌ஷம் குடித்தார். இதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

பின்னர் அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து முத்துசெல்வியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகளை ஏமாற்றிவிட்டதாக கூறி முத்துசெல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர் கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகாவிடம் கேட்ட போது, தீபக் தன்னை காதலித்து பின்னர் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரையும் சேர்த்து வைக்கும்படி முத்துசெல்வி கூறினார். ஆனால் தீபக் இதை மறுத்து அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறினார். புகார் தெரிவித்தால் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் முத்துசெல்விக்கு விருப்பமில்லை. சேர்ந்து வாழ வழிவகை செய்யுமாறு கேட்டார். தீபக் மறுப்பு தெரிவிக்கவே மனம் உடைந்த முத்துசெல்வி வி‌‌ஷம் குடித்து விட்டார். ஏற்கனவே மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்துள்ளது. தற்போது கவுன்சிலிங் பெற இங்கு வந்தனர் என்றார்.