தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925

தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925

‘தேச பந்து’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன்தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று ஐசிஎஸ் தேர்வு எழுதினார். பின்னர் இந்தியா திரும்பி கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தார். வங்கப் பிரிவினையின் போது அரவிந்தர், பிபின் சந்திரபாலுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’ என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார். அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். இவர் சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

 


1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் டார்ஜிலிங்கில் தனது 55-வது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1745 - பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.

* 1779 - ஸ்பெயின் பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.

* 1819 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.

* 1883 - இங்கிலாந்தில் விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

* 1897 - ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

* 1911 - விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது.

* 1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.

* 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

* 1976 - தென்னாபிரிக்காவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

* 1994 - சீன விமானம் TU-154 புறப்பட்டு 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.