தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். எனினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், ‘தொடக்கத்தில் வைரஸ் தொற்று ஒரு இலட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் ஒரு இலட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால், உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.