2020ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் திகதி தென்படும்!

2020ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் திகதி தென்படும்!

2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் திகதி தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சூரிய கிரகணம் காலை 10.18 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.38 மணிக்கு முடிகிறது. இந்த கிரகண நேரத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும். இப்படி அதிக தூரம் சென்றிருக்கும் சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கறுப்பு தட்டை போல் தோன்றும்.

இந்த நிகழ்வு, தீ வலையத்தைப் போல் காட்சியளிக்கும். ஜூன் 21ஆம் திகதி நிகழும் இந்த நிகழ்வு காங்கோ, எத்தியோப்பியா, ஏமன், சவுதி அரேபியா, ஓமான், பாகிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தாய்வான் போன்ற நாடுகளில் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் பல பகுதிகளில் குறித்த சூரிய கிரகணம் பகுதியளவில் தென்படவுள்ளது. அதன்படி, ஜூன் 21 ஆம் திகதி கொழும்பு நகரில் முற்பகல் 10.29 தொடக்கம் 01.19 வரையான காலப்பகுதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்களும் 50 நிமிடங்களுக்கு இது பகுதியளவு சூரியகிரகணமாக தென்படவுள்ளது.

கிரகணத்தின் உச்ச நிலையான பிற்பகல் 11.51 மணிக்கு சந்திரனால் சூரியன் 30 சதவீதம் வரை மறைக்கப்படும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் நிறைவு சில நிமிட மாற்றங்களுடன் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடுத்த சூரிய கிரகணத்தை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இலங்கையர்கள் காண முடியும்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி இவ்வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.