Breaking News
Home / latest-update / மனைவியை வைத்து சூதாடிய கணவன்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மனைவியை வைத்து சூதாடிய கணவன்

ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் தனது மனைவியை தோற்றதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாபாரதக் கதை மீண்டும் திரும்புகிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சம்பவம்.

சூதாட்டத்தில் மனைவியை தோற்ற அந்த கணவன், வெற்றி பெற்ற மனிதரிடம் தனது மனைவியை ஒப்படைத்தார். சூதாட்டத்தில் பிறன் மனைவியை ஜெயித்தவன், அந்த பெண்ணின் கணவரின் முன்னரே பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ததாக பிபிசிக்கு பேட்டியளித்த ஒடிசா மாநில போலிசார் கூறினார்கள். இதை அறிந்த அந்த பெண்ணின் கணவரும், சூதாட்டத்தில் வெற்றி பெற்றவரும் தலைமறைவாகிவிட்டனர்.

“பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பாலேஷ்வர் அனுப்பி வைத்தோம். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தேடும் முயற்சிகளையும் தொடங்கினோம்.”

“குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் வேறு பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று ஒரிசா மாநில போலிஸார் தெரிவித்தனர்.

“கடந்த மாதம் 23ஆம் தேதியன்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டுக்கு வந்த கணவர், என்னை அவருடன் வர அழைத்தார். இந்த நேரத்திற்கு எங்கே போவது என்று கேட்டேன், ஆனால் அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை” என்று பாதிக்கப்பட்ட பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.

“என்னை வலுக்கட்டாயமாக கிராமத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார் என் கணவர். அங்கு சூதாட்டத்தில் வெற்றி பெற்ற என் கணவரின் நண்பர், இருந்தார் அவர் என்னை பலாத்காரம் செய்தார். என்னை விட்டு விடுங்கள் என்று அழுதேன், கதறினேன். ஆனால் என் கதறலுக்கு எந்த பயனும் இல்லாமல் போனது. சூதாட்டத்தில் என்னை பந்தயப் பொருளாக என் கணவர் வைத்தது பிறகுதான் எனக்கு தெரியவந்தது.” என்றார் பாதிக்கப்பட்ட பெண்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் தனது தாத்தாவிடம் தொலைபேசியில் முழு சம்பவத்தையும் பற்றி சொல்லிவிட்டார். சீற்றமடைந்த தந்தை, தனது மகனை அழைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட தனது மகளின் வீட்டிற்கு வந்தார்.

“இந்த சம்பவத்தை பற்றி சம்பந்தி மற்றும் மருமகனிடம் நாங்கள் விசாரித்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் இருவருமே சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு கிராமத் தலைவரிடம் பேசினேன்” என்று சொல்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை.

அந்த கொடுமையான சம்பவத்தைப் பற்றி கிராமத்தில் உள்ள மற்ற பெரியவர்களிடமும் பேசியதாக அவர் மேலும் கூறுகிறார்.

“அவர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள். மகளையும், அவளுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.”

“அவர்கள் கேட்ட கால அவகாசம் முடிந்த பிறகும் எந்த தகவலும் வராததால், மே 27ஆம் தேதியன்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றோம். ஆனால் போலிசாரோ, வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக, கணவனுடன் சமாதானமாக போவது நல்லது என்று மகளுக்கு ஆலோசனை சொன்னார்கள். புதன்கிழமையன்று, போலிஸ் எஸ்.பியை சந்தித்தபிறகு தான் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடிந்தது.” என்கிறார் அவர்.

“நான் விடுப்பில் இருந்தேன். விடுமுறைக்கு பிறகு வந்தபோது, இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக சொன்னார்கள். ஆனால் பிறகு எஸ்.பி எங்களை அழைத்து அறிவுறுத்தியதை அடுத்து உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தோம்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டை நிராகரித்த ப்ரபாரி காவல் நிலைய அதிகாரி.

பாதிக்கப்பட்டவரின் தந்தை போலிசார் மீது வருத்தப்படுகிறார். வழக்கு பதிவு செய்த பிறகும்கூட போலிஸார் அவர்களை தொந்தரவு செய்ததாக கூறிகிறார் அவர்.

“இன்றும் காவல் நிலையத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை உட்கார வைத்திருந்தார்கள். என் மகளிடம் விரும்பத்தகாத கேள்விகளைக் கேட்டார்கள்; அவர் நடத்தியதைப் பார்த்தால், குற்றம் செய்தது சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவன் அல்ல, பாதிக்கப்பட்ட, பணயப் பொருளாக வைக்கப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட என் மகள் தான் என்பது போல இருக்கிறது.” என்கிறார் அவர்.

இப்படிக் கூறும்போதே பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …