Breaking News
Home / விளையாட்டு / IPL T20 - 2018 / பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் – மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளில் நான்காம் இடம் யாருக்கு?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் – மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளில் நான்காம் இடம் யாருக்கு?

ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. பஞ்சாப் அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான்காவது இடத்திற்குதான் கொல்கத்தா, மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெங்களூர், டெல்லி அணிகள் மோசமான தொடர் தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் மூட்டை கட்ட உள்ளன. இன்னும் ஒவ்வொரு அணிக்கும் தலா 4 ஆட்டங்கள் மட்டும் உள்ளன.
இன்று இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். நூலிழை வித்தியாசத்தில் நான்காவது இடத்திற்கு போட்டி போடும் இரண்டு அணிகளும் இன்று வெற்றி பெற கடும் முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு, சென்னை அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய கொல்கத்தா அணி, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. கடைசியாக பெங்களூரு அணியிடம் தோல்வி கண்ட மும்பை அணி அடுத்து வரிசையாக பஞ்சாப், கொல்கத்தா அணிகளை சாய்த்து வெற்றி கண்டது.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் நிலையற்றதாக உள்ளது. அவர் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சிலும் கலக்கி வருகிறார். அவர் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த லீக் ஆட்டத்தில் பின்வரிசையில் களம் இறங்கிய சுனில் நரின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. ஆனால் பந்து வீச்சில் அவர் நன்றாக செயல்பட்டார். ஆந்த்ரே ரஸ்செல் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் சிறப்பு சேர்த்தார். சுனில் நரின் அதிரடி பேட்டிங் கொல்கத்தா அணிக்கு வலு சேர்ப்பதாகும்.
மும்பையிடம் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு சொந்த மண்ணில் பழிதீர்க்க கொல்கத்தா அணி முழு வீச்சில் செயல்படும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மும்பை அணிக்கு இந்த போட்டி மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா ஆட்டம்தான்.
தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அந்த அணி பின்னர் திடீர் விஸ்வரூபம் எடுத்து அடுத்தடுத்து வெற்றிகளை அடைந்தது. இதனால், அந்த அணி மீது எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்துள்ளது. இதேபோல, ராஜஸ்தான் அணிக்கும் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. எனவே, அந்த அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிராக இதுவரை மும்பை அணி அதிக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 5 தடவையும் வெற்றி கண்டுள்ளன. #IPL2018 #MI #RR #KKR

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …