Breaking News
Home / latest-update / நாளை அன்னையர் தினம் – வாழும் தெய்வம் தாயாரை வணங்குவோம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நாளை அன்னையர் தினம் – வாழும் தெய்வம் தாயாரை வணங்குவோம்

நாளை அன்னையர் தினம்.

அம்மா! இந்த வார்த்தைக்கு இயற்கையை விட சக்தி அதிகம். அதனால் தான் அம்மாவைப் பற்றி எழுத யாரும் உள்ள உணர்ச்சிகளை எழுத்தாக்க வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகின்றோம்.

இப்படிச் சொல்லலாமா! அம்மா நீங்கள் மகா சக்தி. நீங்கள் தெய்வம். வாழும் தெய்வம். நாங்கள் அன்றாடம் பார்க்கும் தெய்வம். உங்கள் அன்புக்கு ஏது அளவு? ஏது அளவு? இதற்கு சட்ட திட்டம் உண்டா என்ன? வரைமுறைகள், எல்லைக் கோடுகள் உண்டா என்ன? பட்டா தேவைப்படாத உங்களது பரந்த உலகம் எனக்கு மட்டுமே முழு சொந்தம். உலகில் மிகக் கடினமான பொறுப்பு தாயாய் இருப்பது தான். ஆனால் இதற்கு நீங்கள் யாருடைய பாராட்டையும் எதிர் பார்ப்பதில்லை. எங்களின் தோழி, வழிகாட்டி, குரு என எல்லாமே நீங்கள் தான். எதுவும் எதிர்பாராத அட்ஷய பாத்திரம் உங்கள் அன்பு.

ஒவ்வொரு மனித ஜீவனும் தன் தாயைப் பற்றி இப்படித்தான் நினைப்பார்கள். இந்த ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இது அன்பு உலகம்.

சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா உத்யோகம் தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார்.

பெண் திருமணமானதும் நெற்றியில் இடும் குங்குமம் மாதா அன்னை பராசக்தியினைப் போல் படைக்கும் சக்தியினையும் பெற்று விட்டாய் எனக் கூறும் மங்கள அறிகுறி என ஆன்மீகம் கூறுகின்றது.

ஒரு தாய் தன் பத்து மாத கர்ப்ப காலத்தினைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு ஒன்றினைப் பாருங்கள்.

எந்த தாயும் ஒரு உயிர் தன் வயிற்றினுள் வளரும் காலத்தை மறக்கவே முடியாது.

மாதம் 1 : எனக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. சிலருக்கு இருப்பது போல் காலையில் வயிற்றுப் பிரட்டல், வாந்தி என எதுவும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று என் வயிற்றில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. அதிகம் இனிப்புகள் சாப்பிட ஆசையாய் இருந்தது.

மாதம் 2 : எனக்கு காலையில் வயிற்றுப் பிரட்டல் இருக்கலாம் என்றார்கள். நல்ல காலம் எனக்கு எதுவும் இல்லை. சென்ட், ஷாம்பூ இதன் வாசனைகள் பிடிக்கவில்லை. ஆகவே அவைகளைத் தவிர்த்தேன். அவ்வப்போது சோர்வு போல் இருந்தது. மனம் சற்று தளர்ந்தது. வயிற்றில் அவ்வப்போது உப்பிசம் ஏற்பட்டது. ஆகவே என் உணவு முறைகளில் அக்கறை காட்டினேன்.

மாதம் 3 : உடல் இறுக்கமாய் இருந்தது. வயிறு உப்பிசம் மட்டும் கூடியது. மருத்துவ அறிவுரைகளை முறையாய் பின்பற்றினேன். மனச்சோர்வு அதிகம் ஏற்பட்டது. என் ஆடைகள் இப்பொழுது எனக்கு பொருத்தமாக இல்லை.

மாதம் 4 : லேசாக வெளி தெரிந்த என் வயிற்றினைப் பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். என் சருமம் பளபளவென ஆனது போல் இருந்தது. எனக்கு ஒரே மகிழ்ச்சி, அடிக்கடி பசித்தது. இருவருக்காக சாப்பிடுகிறோம் எனத் தோன்றியது.

மாதம் 5 : என் வயிறு பெரிதாகத் தெரிந்தது. இரவில் தூங்குவது கடினமாயிற்று. அதுவும் திரும்பி படுப்பது கடினமாக இருந்தது. ரொம்ப பசித்தது. அடிக்கடி சமையலறை சென்றேன். நான் உண்ணும் உணவின் அளவு எனக்கே ‘ஷாக்’ ஆக இருந்தது.

மாதம் 6 : பசிதான். சோர்வு தான். நடக்க, படுக்க, உட்கார எல்லாமே கடினமாகத்தான் இருந்தது.

மாதம் 7 : இரவில் அடிக்கடி பாத்ரூம் செல்ல நேர்ந்தது. படுக்கையில் எழுந்திருக்க சிரமப்படும் என்னைப் பார்த்து என் கணவர் சிரிப்பார். நான் எழுந்திருக்க கைபிடித்து உதவ ஆரம்பித்தார். நான் அன்றாடம் செய்யும் சாதாரண வேலைகள் இமாலய சாதனை போல் கடினமாயின. உடல் முழுவதும் வலித்தது. மூச்சு வாங்கியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

மாதம் 8 : நான் ரொம்ப பெரிதாக இருக்கிறேன். ரொம்ப நடக்க முடியவில்லை. நான் ஏதாவது நகர்ந்தால் உள்ளே குழந்தைக்கு கஷ்டமாகி விடுமோ என்ற கவலை அதிகம் இருந்தது.

மாதம் 9 : என்னால் முறையாய் சாப்பிட முடியவில்லை. ஏனெனில் வயிற்றில் இடம் இல்லை. எல்லா இடமும் குழந்தைக்கே சரியாக இருந்தது. ரொம்ப சோர்வு, கொஞ்சம் நடந்தாலே மூச்சு வாங்கியது.

எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் என் மகிழ்ச்சியில் இந்த பத்து மாத அவஸ்தையும் மறந்து போனது. இனி என் மகளே என் உலகம் என்று தோன்றியது.

இது ஒரு நல்ல ஆரோக்யமான மனநிலை, உடல் நிலை உள்ள ஒரு தாயின் அனுபவம். ஆனால் எத்தனையோ தாய்மார்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இவற்றின் நடுவே தன் வயிற்றில் உள்ள பிள்ளையை காப்பாற்றுகின்றனர்.

30 வருடங்களுக்கு முன்னால் பல குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தாயின் நிலையினை எண்ணிப் பாருங்கள். அனைத்து குழந்தைகளிடமும் ஒன்று போல அன்பு காட்டிய அந்தத் தாயினை நினைத்துப் பாருங்கள்.

இன்று விஞ்ஞானம் முன்னேறி விட்டது. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை. இருப்பினும் இன்று அதிகம் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளனர். கடும் போட்டி நிலவும் நிர்வாகத்தில் தன் கர்ப்பத்தினை காரணம் காட்டி சில வசதிகள் பெறுவது கடினம். பல நிறுவனங்கள் சமீபத்தில் திருமணம் நடந்த பெண்களுக்கு வேலையே தருவதில்லை. இரவு, பகல் ஷிப்ட் வேலை, நின்று கொண்டே செய்யும் வேலை, மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் வேலை என காலத்தின் கட்டாயம் தரும் பாதிப்புகளை போராடி ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கிறேன். சிலருக்கு சில மருத்துவ பிரச்சனைகளும் இருக்கக் கூடும். வீடு, ஆபீஸ் என ரோபோட் போல் ஆகி விட்ட நிலையில் இந்த கால இளம் தாய்மார்களை கை கூப்பி வணங்கத்தான் வேண்டும்.

பேறு காலத்திற்குப் பின் உடலில் ஏற்படும் அதிர்வுகளை உடல் பழைய நிலையினை அடைய 3 மாத காலம் பிடிக்கும், இரவு, பகல் என அழும் இளம் சிசு சற்று நிதான நிலையை அடைய  3 மாத காலம் பிடிக்கும். சில தாய்மார்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஒரு நாட்டை கூட ஆண்டு விடலாம். ஆனால் இந்த பிஞ்சு குழந்தையினை ஓராண்டு வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும். இதற்கு தாய் என்ற ஒரு சக்தியினை இறைவன் அளித்திராவிட்டால் நாட்டில் ஜனத் தொகை கால் கூட இருந்திராது. இத்துடன் நின்று விடுமா அம்மாவின் பங்கு. அவளது ஆயுள் உள்ள வரை அவள் அதே அம்மாதான். அவளது இருதயம் பெயருக்குத்தான் உடலின் உள்ளே இருக்கின்றது. மற்றபடி தன் பிள்ளையை நினைத்து நினைத்து இருதயம் வெளியே தான் இருக்கின்றது.

இந்த கட்டுரையினை நான் எழுதும் பொழுது சில தாய் மார்களை குறிப்பிட்டு அவர்களின் சாதனைகளை எழுதவில்லை. காரணம். ஒவ்வொரு தாயும் தன்னை துண்டு துண்டாக பிய்த்து போட்டுத்தான் தன் சக்திக்கு பன்மடங்கு கூடுதலாக கொடுத்து தன் பிள்ளைக்காக வாழ்கின்றாள். இதில் ஒவ்வொரு அன்னையும் சாதனையாளரே!

சுயநல மில்லாத, கலப்படமில்லாத ஒரு அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான்.

இளமை நம்மை விட்டு போகும். வளமை நம்மை விட்டு போகாது, ஆனால் உங்களுக்கு 60 வயதாகி தாய் உயிருடன் இருந்தால் அத்தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்று இருந்தது போலவே இளமையாகவும் வளமையாகவும் இருக்கும்.

அனைத்து தாய்மார்களையும் இவ்வுலகம் கை கூப்பி வணங்குகின்றது. #MothersDay

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …