Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / நல்லூரை நோக்கி படையெடுக்கும் பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
https://www.facebook.com/esoftjaffna/

நல்லூரை நோக்கி படையெடுக்கும் பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி 70 வரையான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர், தீர்த்தோற்சவங்களை முன்னிட்டு ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி 70 வரையான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கோண்டாவிலுள்ள யாழ். சாலையின் செயலாற்றல் உதவி முகாமையாளர் எஸ். பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையானது, யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களின் நன்மை கருதி நாளை மறுதினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும், மறுநாள் திங்கட்கிழமையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் எஸ். பிரகலாதன் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தேர், தீர்த்தோற்சவ நாட்களில் விசேடமாக அதிகாலை 05 மணி முதல் இரவு 08.40 மணி வரை யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

அத்துடன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் பக்தர்கள் தத்தமது இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாகவும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை மற்றும் சங்கானை வைத்தியசாலைக்கு அருகிலிருந்து புறப்படும் பேருந்துகள் தட்டாதெருச் சந்தி வழியாகப் புறப்பட்டுக் கந்தர்மடம் சந்தியில் பக்தர்களை இறக்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடிகாமம், கனகம் புளியடி, உசன், கோவிலாக் கண்டி, மறவன்புலோ ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் பேருந்துகள் நல்லூர் முத்திரைச் சந்தியில் பக்தர்களுக்கு வசதியாக பக்தர்களை இறக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று வசாவிளானிலிருந்து புறப்படும் பஸ்கள் பலாலி பிரதான வீதியூடாகப் புறப்பட்டுக் கந்தர்மடம் சந்தியில் பக்தர்களை இறக்குவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து யாழை நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் காலை 06 மணி , காலை 06.45 மணி, காலை-07.45 மணி, முற்பகல் 09.30 , பிற்பகல் 01.30 மணி ஆகிய நேரங்களிலும், இரவு வேளையில் இயக்கப்படும் பேருந்துகள் இரவு 08 மணி, இரவு 08.15, இரவு-10 மணி ஆகிய நேரங்களில் கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து சேவையில் ஈடுபடும்.

ஊர்காவற்துறை, நயீனாதீவு, குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கொழும்பு, கண்டி உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழமை போன்று யாழ். பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பக்தர்களை இறக்கவுள்ளதுடன், அங்கிருந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்கள் யாழிலிருந்து வசாவிளான் வரை சேவையில் ஈடுபடும் பேருந்தில் பயணிக்க முடியும்.

தேர், தீர்த்த உற்சவ நாட்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்ற அடிப்படையில் யாழில் பேருந்துகள் சேவைகளில் ஈடுபடும்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்தை இயக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

சேவை நேரத்தை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படாத காரணத்தால் இரவு 08.40 மணி வரையே விசேட பேருந்துகள் இயக்கப்படும்.

இவ் வருடம் தேர், தீர்த்த உற்சவங்களின் போது அதிகமான பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பதால் வழமைக்கு மாறாக அதிகமான பேருந்துகள் சேவையில் ஈபடுத்தப்படவுள்ளன.

யாழ். சாலையைப் பொறுத்தவரை 70 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் ஏனைய சாலைகளிலிலிருந்தும் வழமை போன்று பல பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்காக நேரக் கணிப்பாளர் மற்றும் பயிற்சிப் பாடசாலையின் அதிபர் ஆகியோர் கடமையில் ஈடுபடுவர்.

விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளில் இடம்பெறும் இடையூறுகள் தொடர்பில் முறைப்பாடுகளிருப்பின் எழுத்து மூலம் எமக்குத் தெரியப்படுமிடத்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Check Also

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி …

Leave a Reply

Your email address will not be published.