Breaking News
Home / latest-update / நமக்கெதற்கு முட்டாள்தினம் – வாழ்க்கை கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நமக்கெதற்கு முட்டாள்தினம் – வாழ்க்கை கவிதை

பருவக் கிளர்ச்சியில் எழுகின்ற
ஆர்வக்கோளாறை காதலெனக் கணித்துத்
தேன் கனவுகளில் மிதந்து
தெய்வீகம் வளர்த்து திரிகின்ற போதில்
தேவதை பறவை
திருமண சிறகடித்துப் பறந்துவிடும் நாளில்
கிடைத்துவிடுகிறது வாழ்வின்
முதல் முட்டாள் தினம்.

படிக்கின்றக் காலத்தில்
படிக்கக் கூடாததுகளைப் படித்து
படிக்கவேண்டியதை மறந்துவிட்டு
பரீட்சை மண்டபத்தில் பக்கத்து
ஆசனக்காரனைப் பார்த்தெழுதியும்
பெறுபேறுகளில் முட்டைவாங்குகையில்
கிரீடம் அணிவிக்கிறது
அடுத்ததாய் ஒரு முட்டாள் தினம்.

வளர்த்துக்கொண்ட தகுதிகளை வைத்துக்கொண்டு
விண்ணப்பங்களை எழுதிக் குவித்து
காத்திருக்கும் காலங்களில்
தகுதியற்றவர்களின் கைகளுக்குப்
பின்வாசல் வழியே சென்று விடும்
தொழில்கள் எல்லாமே
தினம் ஒரு முட்டாள் தினத்தை
அறிவித்து வைக்கிறது.

புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் மாட்டிக்கொண்டுத்
துடிக்கின்ற மீனாக
வாழ்வதற்கு ஆசைகொண்டு
முடிபோடும் திருமணத்தில்
வாழ்வின் தினங்களே முட்டாள் தினமாக..

நம்பிக்கை முகமூடி அணிந்திருக்கும்
துரோகத்தின் பேரழகில் மயங்கி
சாய்ந்துவிடும் மனசெலாம்
யுகங்கள்வரை நீளும்
முட்டாள் தினத்தின் ஞாபகத்தைச்
சேமித்து வைத்திருக்கும்..

கல்வியெனும் பெருங்கொள்ளைக்கு
வாழ்வையே விலையாக்கும்
கற்றவரும் முட்டாளாகும் தினத்தோடு,
நோய்பட்டு மருத்துவ செலவிற்கு
சொத்தெழுதி வைத்துவிட்டு
மருத்துவமனை சென்று ஏழையாகி
இல்லம் திரும்பும் முட்டாள் தினமுமிருக்க

நமக்கெதற்கு இன்ன்றிந்த முட்டாள் தினம்


Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …