Breaking News
Home / latest-update / ‘செல்பி‘ இனி ‘கில்பி‘ ஆகலாம் – மக்களே அவதானம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

‘செல்பி‘ இனி ‘கில்பி‘ ஆகலாம் – மக்களே அவதானம்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் “உயிரை எடுக்கும் செல்ஃபிகள்” என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் செல்ஃபி எடுக்கும் போது
நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதையடுத்து, மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எழுதுகிறார் பி.பி.சி செய்தியாளர் கீதா பாண்டே.

பெங்களூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் (19 மைல்கள்) தொலைவில் உள்ளது குண்டாஞ்சனேயர் கோவில். அதனை சுற்றிப் பார்க்க கடந்த செப்டம்பர் மாதம் ஞாயிற்றுகிழமை ஒன்றில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்றிருந்தனர்.

ராமகொண்டலு கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் பல பக்தர்கள் மட்டும் அல்லாது அருகில் உள்ள கல்லூரி மாணவர்களும் அதிகம் வரும் இடம்.

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) சேர்ந்த இளைஞர்கள், காலை முழுவதும் அந்த கோவில் வளாகத்தை சுத்தம் செய்து அழகு படுத்தினர். பின்பு மதிய வேலையில் வெயில் அதிகரிக்க, கோவில் குளத்தில் குளிக்க முடிவு செய்தனர்.

அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டும் கத்திக் கொண்டும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அங்கு கடை வைத்திருக்கும் மஞ்சுநாத்.

ஆனால், அந்த நாள் சோகத்தில் முடிந்தது. குளிக்க சென்ற மாணவர்களில் ஒருவரான ஜி. விஷ்வா 15 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கினார்.

மாணவர்கள் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட ஒரு செல்ஃபியில், மூழ்கும் இளைஞரின் தலை மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கேமராவின் மறுபக்கத்தை பார்க்கிறார்கள்.

மூழ்கிய இளைஞனை யாரும் கவனிக்காத நிலையில், ஒரு மணி நேரம் கழித்து அவன் காணாமல் போன விஷயம் தெரிய வந்தது. பின், காவல்துறை மற்றும் உள்ளூர் வாசிகள் உதவியுடன் மூன்று மணி நேரம் கழித்து இறந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்ற ஒருசில வாரங்கள் கழித்து, கோவிலில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்திலேயே மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. செல்ஃபி எடுக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

“என் உறவினர் ஒருவரை பள்ளியில் கொண்டுவிட இந்த வழியாக காலை 8:15 மணிக்கு சென்ற போது எல்லாம் இங்கு அமைதியாக இருந்தது” எனக் கூறுகிறார் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவன் சரத் கௌடா.

அரை மணி நேரம் கழித்து வரும்போது இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்ததைப் பார்த்து சம்பவ இடத்திற்கு தாம் வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“எல்லா இடங்களிலும் அவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. செல்ஃபி எடுப்பதற்காக ரயில் பாலங்களில் அவர்கள் படுத்திருந்ததால், ரயில் வருவதை யாரும் பார்க்கவில்லை என்றும் அன்று ஓர் இளைஞரின் பிறந்தநாள்” என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களும் அதிர்ச்சியளிக்க, அம்மாநில அரசு செல்ஃபி எடுக்கும் சுழல்கள் குறித்து இளைஞர்கள் யோசிக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் அவை கில்ஃபிக்களாக (killfies) மாறிவிடும் அபாயம் உள்ளதென்றும் கூறியது.

11 மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்களில் இதுகுறித்து விளம்பரப் பலகைகள் வைக்க பணியாற்றி வருவதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பிபிசியிடம் தெரிவித்தார்.

“அந்த விளம்பரங்களில், செல்ஃபிகள் உயிரைப் பறிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறும். கில்ஃபிகள் குறித்து எச்சரிக்கும் விதமாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இது குறித்த பிரச்சாரங்களை ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளதாக” அவர் கூறினார்.

இந்தியாவில் 1.1 பில்லியனுக்கு மேலான மக்கள் கைப்பேசி வைத்துள்ளனர். அதில் சுமார் 300 மில்லியினுக்கு மேலான மக்களிடம் ஸ்மார்ட்போன் உள்ளது.

சமூக ஊடகங்களின் மேல் அதீத மோகம் கொண்ட இளைஞர்கள், கச்சிதமான செல்ஃபிகள் எடுக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்கிறார்கள் மற்றும் இதற்காக தேவையற்ற இடர்ப்பாடுகளை எடுக்கிறார்கள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல சந்தர்பங்களில் இளம் ஆண்களே இதில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் மற்ற எந்த நாடுகளையும் விட இந்தியாவில் செல்ஃபி தொடர்பான இறப்புகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கார்னெகே மெல்லான் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியின் இந்திரபிரஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது.

மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2016 வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த 127 செல்ஃபி தொடர்பான மரணங்களில் இந்தியாவில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயிலில் அடிபட்டும், உயரங்களில் இருந்து தவறி விழுந்தும், குளங்கள் மற்றும் ஏரிகளில் மூழ்கியும் அல்லது யானைகளால் அடித்து செல்லப்பட்டும், கடற்கரை ஓரங்களிலும் செல்ஃபி எடுக்கும் போதும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரயில்வே பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அல்லது பேருந்துகளில் பயணம் செய்யும் போது செல்ஃபி எடுத்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த ஜுன் மாதம் வடஇந்தியாவில் உள்ள மொரதாபாத்தில் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

கடந்த ஆண்டு மும்பையில் செல்ஃபி எடுக்கும் போது 18 வயது சிறுமி ஒருவர் கடலில் மூழ்கியதையடுத்து, புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் மேற்கு மும்பை காவல்துறையினர் “இது செல்ஃபி எடுக்கும் இடம் இல்லை” என்ற பதாகைகளை நிறுவத் தொடங்கினர்.

ஆனால் கர்நாடகா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கார்கே கூறுகையில் “இது செல்ஃபி எடுக்கும் இடம் இல்லை” என்ற பதாகைகளை ஆங்காங்கே நிறுவுவது கடினம் என்றும் இது மாதிரியான துயரச் சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம் என்றும் கூறினார்.

“ஒவ்வொரு இடமும் ஒரு சாத்தியமான அச்சுறுத்தல் தான். நந்தி மலை மற்றும் அணைகள் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் இது நடக்கலாம், அதே சமயத்தில் ரயில்வே பாலங்களிலும் அல்லது உங்கள் வீட்டு பால்கனியிலும் கூட நடக்கலாம். ஒரு சிறிய தவறு பெரிய இழப்புகளை தரும்” என்றார் அவர்.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பது நல்லது தான் ஆனால் அதை ஸ்மார்டாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தான் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு கூற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …