Home / latest-update / கோடி பாவங்களும் தீரும் மகா சிவராத்திரி வழிபாடு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கோடி பாவங்களும் தீரும் மகா சிவராத்திரி வழிபாடு

கோடி பாவங்களும் தீரும் மகா சிவராத்திரி வழிபாடு

சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் “சத்தர்’ என்றும், அருவுருவத் திருமேனியுடைய சிவம் “பரம்பொருள்’ என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் “பிரவிருத்தர்’ என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

காலையில் தரிசிக்க – நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க – தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க – பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க – வீடுபேறு கிடைக்கும்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்கள் வணங்குகிறார்கள்.

இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். சிவாலயங்களை சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்,பஞ்சபூத சிவத்தலங்கள்,ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்,ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சத்த விடங்க சிவத்தலங்கள்,முக்தி தரவல்ல சிவத்தலங்கள்,தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவ தலங்கள்),தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக நம்புகின்றார்கள்.

சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.

முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது. அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது. மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச்
சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.
இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம் முடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்று வதையும் குறிக்கும். நான்காவதாக செய்ய வேண் டியது தீபம் ஏற்றுதல், இல் வாழ்க்கைக்குத் தேவை யான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுப வித்து முழுதிருப்தி அடைய முடியும்‘.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண் டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைச்சு மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

மறுநாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்துச் சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவசிந்தனையோட கோவிலுக்குப் போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லா விட்டாலும் கூட லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக்கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது? சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

‘சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சிவராத்திரியன்று விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சிவராத்திரியன்று விரதமிருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப்பதவியையும் அடைந்தார். எனவே சிவராத்திரி வழிபாடு அனைத்து வளங்களையும் நமக்குத் தரும்.

Check Also

20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …