Breaking News
Home / latest-update / கர்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி – முதல்வர்
https://goo.gl/forms/Iiu2lq56Uiy34mYh2

கர்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி – முதல்வர்

போலீஸ் தாக்கியதில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த கர்பிணிப்பெண் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கர்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி – முதல்வர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் இரவு 7 மணியளவில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது.

இதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் ரத்தப்போக்கும் அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை 108 ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.

அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். வாகனங்களை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றவியல் விசாரணை முடிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Check Also

இன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்

 ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். …