Home / விளையாட்டு / IPL T20 - 2018 / ஐபிஎல் – சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐபிஎல் – சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை சாய்த்தது கொல்கத்தா

டில்லிக்கு எதிரான லீக் போட்டியில் நிதிஷ் ரானா (59), ஆன்ட்ரூ ரசல் (41) கைகொடுக்க 71 ரன் வித்தியாசத்தில் கோல்கட்டா அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடர்  நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. கோல்கட்டா ஈடன்கார்டன் மைதானத்தில்  இன்று இரவு நடந்த 13வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கோல்கட்டாவை எதிர்த்து டில்லி மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன்    காம்பிர் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் மிட்சல் ஜான்சனுக்கு பதில் டாம் குர்ரன் தேர்வு செய்யப்பட்டார். டில்லி தரப்பில்  டேனியல் கிறிஸ்டியன் இடத்தில் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் இருவரும் துவக்கம் தந்தனர். பவுலட் வேகத்தில் சுனில் நரைன் (1) சரிந்தார். பின் கிறிஸ் லின்னுடன் உத்தப்பா இணைந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை விளாசினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த நிலையில், ஷபாஸ் நதீம் பந்தில் உத்தப்பா ஆட்டமிழந்தார். இவர் 19 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 35 ரன் எடுத்தார். முகமது ஷமி வேகத்தில் கிறிஸ் லின் 31 ரன் (29 பந்து, 4  பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற ஆட்டம் பரபரப்பானது.

இதையடுத்து நிதிஷ் ரானாவுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். கோல்கட்டா அணி 11.4 ஓவரில் 100 ரன் கடந்தது. முக்கிய கட்டத்தில் கிறிஸ் மோரிஸ் திருப்புமுனை தந்தார். இவரது பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் (19) ஆட்டமிழந்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே களம் வந்த ஆன்ட்ரூ ரசல், தனது வழக்கமான அதிரடியில் இறங்கினார். பந்து சிக்சராக பறக்க ரசிகர்கள்  ஆர்ப்பரித்தனர். இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ரானா 30 பந்தில் அரைசதம் அடித்தார். ரசல் 41 ரன் (12 பந்து, 6 சிக்சர்)    எடுத்து பவுல்ட் பந்தில் கிளீன் ‘ஸ்டெம்புகள் சிதற’ போல்டானார். இவரைத் தொடர்ந்து ரானாவும் வெளியேறினார். இவர் 59 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 4  சிக்சர்) எடுத்தார். சுப்மன் கில் (6). குர்ரன் (2), சாவ்லா (0) ஏமாற்றினர். முடிவில் கோல்கட்டா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது.  ஷிவம் மாவி (0) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி தரப்பில் திவாதியா 3, பவுலட், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய டில்லி அணிக்கு இம்முறை துவக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பைக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித்தந்த ஜேசன் ராய் (1) சாவ்லா ‘சுழலில்’ காத்திக்கால் ‘ஸ்டெம்பிங்’ செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ரசல் வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் (1) சரிந்தார். ஷிவம் மாவி பந்தில் கேப்டன் காம்பிர் (9) கிளீன் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய ரிஷாப் பன்ட்டுடன் மேக்ஸ்வெல் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். சரிவிலிருந்து ஓரளவு மீண்ட நிலையில், குல்தீப் யாதவ் பந்தில்  ரிஷாப் பன்ட் (43), மேக்ஸ்வெல் (47) ஆட்டமிழக்க கோல்கட்டா வெற்றி உறுதியானது. திவாதியா (1), கிறிஸ் மோரிஸ் (2), முகமது ஷமி (7) சொதப்பினர். கடைசியாக குல்தீப் பந்தில் பவுல்ட் ‘டக்-அவுட்’ ஆக டில்லி அணி 14.2 ஓவரில் 129 ரன்னுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. நதீம் (6) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா தரப்பில் சுனில் நரைன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நிதிஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.

Check Also

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?

மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் …