Breaking News
Home / விளையாட்டு / IPL T20 - 2018 / எழுச்சி பெறுமா பஞ்சாப் * பெங்களூருவுடன் மோதல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எழுச்சி பெறுமா பஞ்சாப் * பெங்களூருவுடன் மோதல்

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்க உள்ள முக்கிய போட்டியில் பெங்களூருவை எதிர்த்து பஞ்சாப் மோதுகிறது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-11 தொடர் நடக்கிறது. இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ள 48வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தொடக்கத்தில் எழுச்சியுடன் விளையாடி வெற்றிகளை பெற்று வந்தது. ஆனால், 2வது சுற்றில் இந்த அணி சற்று தடுமாறி வருகிறது. இந்த அணி கடைசியாக விளையாடிய இரண்டு (ராஜஸ்தான், கோல்கட்டா) அணிகளுக்கு எதிராக பரிதாபமாக தோற்றது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.

பஞ்சாப் அணியின் பலமே பேட்டிங்தான். குறிப்பாக லோகேஷ் ராகுல் சூப்பர் பார்மில் உள்ளார். ஓவ்வொரு போட்டியிலும் இவரது ஆட்டம் சிறப்பாக உள்ளது. எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கும் இவர் இதுவரை பங்கேற்ற 11 ஆட்டத்தில் 5 அரைசதம் உட்பட 537 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் டில்லி வீரர் ரிஷாப் பன்ட் (582 ரன்) உள்ளார். தொடக்கத்தில் அசத்தலாக விளையாடிய கிறிஸ் கெய்ல் கடந்த சில போட்டிகளாக சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கிறார். இருந்தும் இவர் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 332 ரன்கள் எடுத்துள்ளார். கருண்    நாயர் (246) அசத்துகிறார். இவர்கள் மூவர் தவிர மற்றவர்களின் ஆட்டம் சிறப்பாக இல்லை. வெளிநாட்டு வீரர்களில் ஆரோன் பின்ச், ஸ்டாய்னிஸ், மில்லர் ஆகிய மூவரில் ஓருவருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. இதில், இவர்கள் மூவருமே இத்தொடரில் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியவில்லை. தவிர மோசமான பார்ம் காரணமாக யுவராஜ் அணியில் இடம்பெறவில்லை. இந்த அணியின் மத்திய வரிசை பேட்டிங் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தொடக்கத்தில் பந்து வீச்சில் பலமாக ருந்த பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளாக சொதப்பி வருகிறது. ‘பவர்-புளே’வில் அசத்திய முஜீப் உர் ரஹ்மான் சமீபத்திய போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். தவிர இவரால் 4 ஓவர் முழுமையாக வீசமுடியவில்லை. இருநம் இவர் 12 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்த அணிக்கு நம்பிக்கை தரும் ஒரே பவுலராக ஆன்ட்ரு டை உள்ளார். இவர் இதுவரை 20 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். மோகித் சர்மா, ராஜ்பூத், அஷ்வின் ஆகியோரது பந்து வீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பந்துவீச்சுக்கு ஆதரவாக பீல்டிங் உள்ளது. இருந்தும் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தினால் 7வது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மீதி உள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்த அணிக்கு ‘பிளே-ஆப்’ வாய்ப்பு கிடைப்பது மிகவும் சிரமம். தவிர, அடுத்து வரும் 3 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட இந்த தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

பெங்களூருவைப் பொறுத்தவரை வலிமையான அணி என்ற போதும் வீரர்களிடையே ஒறுங்கிணைப்பு இல்லாததால் இந்த தொடரில் சாதிக்கமடியவில்லை. கேப்டன் விராத் கோஹ்லி சூப்பர் பார்மில் உள்ளார். இவர் இதுவரை 466 ரன்கள் குவித்து முன்னணியில் உள்ளார். இவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் 358 ரன்கள் எடுத்துள்ளார். இந்த இருவரை நம்பியே இந்த அணியின் பேட்டிங் உள்ளது. மன்தீப் சிங் (245) ஓரளவு கைகொடுக்கிறார். இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் படுமோசமாக உள்ளது. இதனால், பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியவில்லை. கோஹ்லி, டிவிலியர்ஸ் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து விட்டால் பெங்களூரு அணியின் தோல்வி உறுதி என்றாகிவிடுகிறது. பொதுவாக பெங்களூரு அணியின் தொடர் தோல்விக்கு பந்துவீச்சுதான் முக்கிய காரணமாக இருந்து வந்தது. இப்போது இந்த வரிசையில் பேட்டிங்கும் சேர்ந்து கொண்டது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை அணிக்கு உமேஷ் யாதவ் மட்டுமே நம்பிக்கை தருகிறார். இவர் இதுவரை 14 விக்கெட் வீழ்த்தி உள்ளார். சாகல், முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பந்து வீச்சு எடுபடவில்லை. சாகல் மொத்தமே 10 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஆல்-ரவுண்டராக களமிறங்கியுள்ள கிராண்ட்ஹோம் இதுவரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வலிமையான பஞ்சாப் அணிக்கு நெருக்கடி தரமுடியும். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.

நேருக்கு நேர்: இருஅணிகளும் இதுவரை 21 முறை மோதி உள்ளன. இதில், பஞ்சாப் அதிகபட்சமாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டத்தில் மட்டுமே பெங்களூரு தனது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது நினைவிருக்கும்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …