Breaking News
Home / latest-update / இன்று நள்ளிரவு 12 மணியுடன் வட மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு…..!! வடக்கின் அதிகாரம் ஆளுனர் கைகளில்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்று நள்ளிரவு 12 மணியுடன் வட மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு…..!! வடக்கின் அதிகாரம் ஆளுனர் கைகளில்…!!

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. நள்ளிரவு 12 மணியுடன் மாகாண சபையின் சகல அரசியல்சார் செயற்பாடுகளும் முடிவுக்கு வருகின்றன.வடக்கு மாகாண சபை இலங்கையைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு சபையாகும். ஏனைய மாகாணங்களைவிட அதிகூடிய நிர்வாக மாவட்டங்களையும் தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இது விளங்குகின்றது.இதன்படி முதலாவது வடக்கு மாகாணசபை 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 2013 மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாகாணசபை ஒன்றின் ஆட்சிக் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டு காலம் ஆகும். இச்சபையின் முதலாவது அமர்வு 2013 அக்டோபர் 25 ஆம் நாள் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள புதிய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது.

முதலமைச்சராக ஓய்வுபெற்ற, உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்டார்.சி. வி. கே. சிவஞானம், அன்ரன் ஜெயநாதன் ஆகியோர் சபைத் தலைவராகவும், பிரதித் தலைவராகவும் போட்டியின்றி முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண சபையின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 36 ஆகும். ஆனாலும் அறுதிப்பெரும்பான்மையினைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மேலதிக இரு ஆசனங்களுடன் 38 ஆசனங்களுடன் முதலாவது அமர்வு கூடியது.

அன்றைய தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேலதிக இரு ஆசனங்களுடன் முப்பது ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.

அதன்படி வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் எதிர்க் கட்சித் தலைவராக ஈ.பி.டி. பி கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் என்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நியமிக்கப்பட்டார். இடையில் ஈ.பி.டி.பி கட்சிக்குள் நாடந்த உள் முரண்பாடுகள் காரணமாக கமலேந்திரன் நீக்கப்பட்டு சினத்துரை தவராசா நியமிக்கப்பட்டு இன்றுவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வந்தார்.

வடக்கு மாகாணசபையைப் பொறுத்தவரை முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். வரலாற்றிலேயே 2013வரை வட மாகாணசபையில் அமைச்சர்கள் இருக்கவில்லை.

முதலமைச்சராக விக்கினேஸ்வரன் அவர் சார்ந்திருந்த கட்சியின் உறுப்பினர்களால் செப்டெம்பர் 23அன்று ஏகமனதாக தெரிவிசெய்யப்பட்டார். ஒக்டோபர் 1ஆம் நாளன்று அப்போதைய ஆளுநர் சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதுடன் ஒக்டோபர் 7ஆம் நாளன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமைச்சரவைக்கு நான்கு அமைச்சர்கள் ஒக்டோபர் 10ஆம் நாள் முதலமைச்சரால் தேர்வுசெய்யப்பட்டு மறுநாள் ஒக்டோபர் 11 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், முதலாவது அமர்வு இடம்பெற்று சரியாக ஐந்து வருடங்களின்பின்னர் இன்று நள்ளிரவுடன் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 …