Breaking News
Home / latest-update / காதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா

காதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா

காதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா
அடுத்த வினாடியே, இந்த உலகில் இருந்து கொரோனா வைரஸ் உன்னால் ஒழிந்து போகட்டும்!

இப்படியொரு வரத்தை கடவுள் தனது பக்தர்கள் அனைவருக்கும் அளித்தார் என்றால், அதை சற்றும் யோசிக்காமல் உடனே பயன்படுத்துபவர்கள் யாராக இருக்கும்?

நிச்சயமாக, காதலர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்கு பின்னால்தான்.

ஆம். இந்த காதலர்களை, நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா படாதபாடு படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, பணியிட காதலர்களுக்கு. கூடவே கள்ளகாதலர்களுக்கும்தான்.

கடற்கரை, பூங்கா, சினிமா தியேட்டர், ரெயில் நிலையம், பஸ் நிறுத்துமிடம், பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள், கடை வீதி, வணிக வளாகங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்கள்… என ஒரு இடம் பாக்கி விடாமல் அன்றாடம் எங்காவது ஓரிடத்தில் சந்தித்து மணிக்கணக்கில் கன்னா பின்னாவென கதை பேசி, காதல் பயிரை உரம் போட்டு செழிக்க வளர்த்து வந்தவர்கள் மத்தியில் இந்த புதிய கொரோனா வைரஸ் திடீர் வில்லனாக வந்து அணுகுண்டை அல்லவா, வீசிவிட்டது?

அரசின் ஊரடங்கு உத்தரவால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எல்லாமே முடங்கிப் போச்சு!

‘வண்டியை எடுத்துட்டு போய் உடன் படிப்பவரை நேரில் பார்த்து பாட சந்தேகங்களை கேட்டு வருகிறேன்’ என கதை விடவும் முடியவில்லை. பகல் நேரத்தில் செல்போனில் கடலை போடுவதும் வீட்டில் பெற்றோர் கண்காணிப்பால் பாழாய் போய்விட்டது.

(இந்தியாவில் 80 சதவீத வீடுகளில் 2 அறைக்கும் மேல் இல்லை என்கிற புள்ளி விவரமும் கொரோனா தாக்குதல் நேரத்தில் இந்த காதல் வளர்ப்புக்கு ஆப்பு வைப்பதாக உள்ளது.)

சரி, இரவில் எல்லோரும் உறங்கிய பிறகு பேசலாம் என்று செல்போனை நைசாக எடுத்து ‘டச்’ செய்தால் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு பெண்ணின் அறிவுரை ஒரு நிமிடம் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒலித்து ‘மூடை’ மாற்றுகிறது.
காதலர்கள்

வீடியோ காலில் பேசலாம் என்றால், அந்த காலத்து ‘டிரங்க் கால்’ மாதிரி கத்திப் பேசி வீட்டில் காதல் ரகசியத்தை போட்டு உடைத்த மாதிரி ஆகிவிடுமோ? என்ற பயம் வேறு வருகிறது.

ஏகப்பட்ட பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எல்லோரையும் முட்டாளாக்கி, துணிந்து ‘டூ வீலரை’ ஓட்டிக்கொண்டு சாலைக்கு வந்தால் போலீஸ்காரர் லத்தியை சுழற்றி எதுக்கு வந்தே?… என மிரட்டி மீண்டும் வீட்டுக்கே விரட்டுகிறார். காதலிக்க வந்தேன் என்று அவரிடம் உண்மையை சொன்னால் சும்மா விடுவாரா? இன்னும் ரெண்டு சேர்த்து போடுவார்.

இதையெல்லாம் தாண்டி, ‘நம்ம ஆள்’ வீட்டு பக்கம் போய் ஜன்னல் வழியாக பார்க்கலாம் என்றால் வீட்டையே மறைத்து வேப்பிலை தோரணம். கொரோனா வைரஸ் வீட்டிற்குள் நுழைந்து விடக்கூடாதாம்.

காதலின் சுகம் காத்திருத்தல் என்பார்கள். 10-15 நிமிடம் காத்திருக்கலாம். ஒரு மணி நேரம் வரை கூட பொறுத்திருக்கலாம், ருசிக்கும்.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் ஒழிந்தால் ஒரே வினாடியில் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் காதலர்களின் ஒருமித்த சிந்தனை என்பது 100 சதவீத உண்மை.

இந்த பெரும் ஏக்கம், ஆதங்கம் ‘வீட்டை விட்டு வெளியே வராதீங்க’ என்று கொரோனாவுக்காக உத்தரவு போட்டுள்ள எல்லா நாடுகளின் காதலர்களிடமும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்பச் சொல்லுங்க, கடவுள் அளிக்கும் கொரோனா ஒழிப்பு வரத்தை யார் முதலில் பயன்படுத்துவார்கள் என்று…?

Check Also

ஸ்ரீலங்காவில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்: இருவர் பலி

மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் பலியாகியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். …

error: Content is protected !!