Breaking News
Home / latest-update / அடங்கமறுக்கும் கொரோனா: ஏழு இலட்சம் தாண்டிய பாதிப்பு- 40 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அடங்கமறுக்கும் கொரோனா: ஏழு இலட்சம் தாண்டிய பாதிப்பு- 40 ஆயிரத்தை நெருங்கும் மரணங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி பேரழிவை ஏற்படுத்திவருகின்ற நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 7 இலட்சத்து 22 ஆயிரத்து 350 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், 33 ஆயிரத்து 980 பேரைக் காவுகொண்டுள்ள இந்த வைரஸ் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 766 பேர் குணமடைந்துள்ளனர்.

எனினும், வைரஸ் பரவல் தீவிர நிலையிலேயே பரவிக்கொண்டிருப்பதுடன் ஐரோப்பிய நாடுகள் பலவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகின்றன.

இத்தாலியில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸால் இதுவரை 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி தீவிரமாகவே அதிகரித்துச் செல்கின்றது. அங்கு நேற்று ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியைத் தொடர்ந்து தற்பொது ஸ்பெய்னிலும் தீவிரமாக மனிதர்களைப் பலியெடுத்துவரும் கொரோனாவால் அங்கு ஒரே நாளில் 821 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன், பாதிப்பு 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் நோய்த் தொற்று தீவிரமடைந்தவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் தீவிரத்தைக் காட்டிவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 292 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 292 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜேர்மனியும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் நேற்று 108 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்த ஜேர்மனியின் மாநில நிதியமைச்சர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள ஹெய்சி என்ற மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்த தோமஸ் ஸ்கிபெர் கொரோனா பாதிப்பால் தனது மாநிலத்தின் பொருளாதார நிலைமை மோசமானதைக் கண்டு மனமுடைந்துள்ளார்.

இந்நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அப்பகுதி ஆளுநருடன் அடிக்கடி விவாதித்து வந்தும் அவை பலனளிக்காமல் போனதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், பிற ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்தில் ஒரே நாளில் 132 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 771 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் பெல்ஜியத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதனைவிட உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையிலானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 469 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 264 பேர் மரணித்த நிலையில் மொத்த மரணம் 2 ஆயிரத்து 484 ஆகக் கூடியுள்ளதுடன் தீவிர சிகிச்சையில் மூவாயிரம் பேர் வரை உள்ளனர்.

இதனைவிட, இங்கிலாந்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவரும் வைரஸ் ஒரே நாளில் அங்கு 209 பேரைக் காவுகொண்டுள்ளது. இதுவரை 1,228 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஈரானில் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் பாதிவாகி வரும் நிலையில் நேற்று 123 மரணங்கள் பதிவாகி மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சுவிற்சர்லாந்தில் 36 உயிரிழப்புக்களும், துருக்கியில் 23 உயிரிழப்புக்களும், பிரேஸிலில் 22 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவில் நேற்று 12 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. சீனாவைத் தவிர்த்து ஆசிய நாடுகளில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் கணிசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதேவேளை, சீனாவில் தறபோது வைரஸ் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அங்கு 81 ஆயிரத்து 439 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டு 3ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 75 ஆயிரத்து 448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 742 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி…! சற்று முன்னர் வழங்கப்பட்ட அனுமதி…!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட அதிகார பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை …

error: Content is protected !!