Breaking News
Home / latest-update / தெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி

விஷ்ணுவை ‘அலங்காரப் பிரியர்’ என்றும், சிவபெருமானை ‘அபிஷேகப் பிரியர்’ என்றும் சொல்வார்கள். நாம் எந்த தெய்வத்திடம் எந்த கோரிக்கையை முறையிடுகின்றோமோ, அந்த தெய்வத்திற்கு பிடித்த விதத்தில் வழிபாடு செய்தால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைத்துக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் தெய்வ வழிபாடும், நம்பிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றன. வழி பாடுகளில் எத்தனையோ வகை இருக்கின்றது. கல்லால் அடித்தவனுக்கும், வில்லால் அடித்தவனுக்கும், சொல்லால் அடித்தவனுக்கும் கூட காட்சி தந்தவர், இறைவன். இறைவனிடத்தில் எந்தப் பாகுபாடும் இல்லை. இறைவனின் முன்னால் அனைவரும் சமம்தான். எனவே இறைவனை, ஆடை- ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தும் பார்க்கலாம்; பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும் பார்க்கலாம். கற்கண்டை நைவேத்தியமாக படைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டால் கூட, இறைவன் நற்பலன்களை அள்ளித் தருவார்.ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கர்மவினையால், விதிக்கப்பட்டதுதான் ‘விதி.’ அதே போல் ஒவ்வொருவருக்கும் விதி என்று ஒன்று இருந்தால், கண்டிப்பாக அதற்கு விலக்கு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும். அந்த விதிவிலக்கானது, வழிபாட்டின் மூலமாகக் கூட அமையலாம். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான்.

ஒரு அலுவலகத்திற்கு செல்லும் பொழுது, பொதுமக்கள் வரிசையில் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் ஒரு வி.ஐ.பி. வந்துவிட்டால் அவரை வரிசையில் நிறுத்தாமல் அழைத்துச் செல்வர். வரிசையில் காத்திருக்கும் மக்கள், அதைப் பார்த்து “அவருக்கு மட்டும் என்ன விதி விலக்கு?” என்று கேட்பார்கள். அவர் புகழ் பெற்றவராக விளங்கு வதுதான், அந்தச் சலுகைக்கு காரணம். அதைப்போலவே நாம் இறைவனின் அருள்பெற்றவராக விளங்கினால், நமக்கும் விதிவிலக்கு உண்டு.

இந்த மாசி மாதம் சிவனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில்தான் சிவபெருமானுக்குரிய சிவராத்திரி திருநாள் வருகிறது. சிவனுக்கு உகந்த மாதத்தில், நாம் நமக்கு யோகம்தரும் நாளில் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெறும். செயல்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். அபிஷேகம் என்பதை, இயன்றவர்கள் எல்லாப் பொருட்களையும் கொண்டு செய்யலாம். இல்லையெனில் நமது கோரிக்கை என்னவோ, அதற்கு தகுந்த பொருளைக் கொண்டு மட்டுமே அபிஷேகம் செய்து வழிபடலாம்.உதாரணமாக பால் அபிஷேகம் செய்தால் ஆயுள் நீடிக்கும்; ஆரோக்கியம் சீராகும். பன்னீர் அபிஷேகம் செய்தால் புகழ் பெருகும்; சந்தோஷம் நிலைக்கும். தயிர் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால், அஞ்சாமல் எதிரிகளை வெல்லும் வாய்ப்பு உருவாகும். சாதம் கொண்டு அபிஷேகம் செய்தால், சலக நன்மைகளையும் பெறலாம். ஐப்பசி மாதத்தில் வரும் அன்னாபிஷேகத்தில் இறைவனுக்கு சாதத்தால் அபிஷேகம் செய்தால் பசிப்பிணி விலகும். தேன் அபிஷேகம் செய்தால் குரல் வளம் சிறப்பாக அமையும். சர்க்கரையால் அபிஷேகம் செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகும். இளநீரால் அபிஷேகம் செய்தால் பிறவிப் பயன் கிடைக்கும். பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்தால் கடன்தொல்லை அகலும். காசு, பொன், பொருள் கொண்டு கனகாபிஷேகம் செய்தால் பொன்பொருள் கிடைக்கும்.

எதுவும் செய்ய இயலாதவர்கள், தண்ணீரால் கூட இறைவனை நீராட்டலாம். நீங்கள் எண்ணியதை இறைவன் நிறைவேற்றுவார். அபிஷேக வழிபாடு என்பது நாம் செய்யக்கூடிய பொருளில் மட்டும் அல்ல. செய்யும் மனம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல மனதுடன் எந்தப் பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்தாலும், ஈசன் நல்ல பலனை வழங்குவார். எதைச் செய்தாலும் நல்லெண்ணத்துடன் செய்ய வேண்டும். ஒரே சிந்தனையோடு வழிபட வேண்டும்.‘சரி இவ்வாறு அபிஷேகம் மட்டும் செய்தால் போதுமா?’ என்று நினைப்பீர்கள். அபிஷேகம் முடிந்ததும் நமது குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரங்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை முன்நிறுத்தி அர்ச்சனை செய்வதுடன், அந்த தெய்வத்தின் சன்னிதியில் கண்டிப்பாக ஜோடி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். எந்த தெய்வ சன்னிதிக்குச் சென்றாலும் ஒளி விளக்கை ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் கண்டிப்பாக உருவாகும்.

சிவராத்திரி அன்று நடைபெறும் ஆறுகால பூஜையில் தங்களால் முடிந்த கைங்கரியங்களைச் செய்து, சிவன் நாமத்தை உச்சரித்தால் கண்டிப்பாக வளர்ச்சி மீது வளர்ச்சி வந்து கொண்டேயிருக்கும். சிவனை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். செல்வாக்கும் உயரும் என்பது உறுதி.

Check Also

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை …